ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்; அஹமதாபாத்தில் ஹோட்டல் வாடகை, விமான கட்டணம் பன்மடங்கு உயர்வு!
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை முன்னிட்டு அகமதாபாத்தில் ஹோட்டல்கள் மற்றும் விமானங்களின் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை கிரிக்கெட் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்து, நாக் அவுட் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டி நாளை மதியம், அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
நரேந்திர மோடி மைதானத்தை பொறுத்தவரை 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் போட்டிகளை கண்டுகளிக்கும் வகையிலான மிகப்பெரிய மைதானம் ஆகும். இதில், 30,000 முதல் 40,000 பேர் வரை வெளி நாடுகளில் இருந்து போட்டிகளை பார்க்க வருகைத் தருகின்றனர். இதனால் ஹோட்டல்களில் எப்போதும் பின்பற்றும் கட்டணங்களை தாண்டி, 5 மடங்கு அதிகமாக வாடகை வசூலிக்கப்படுகிறது.
அதாவது 5 ஸ்டார் ஹோட்டல்களில், இரு இரவுக்கு தங்கும் கட்டணம் ரூ.50,000 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் இடங்களில் ரூபாய் 2 லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கப் படுகிறது. சாதாரண தங்கும் விடுதிகளில் பொதுவாக 4,000 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 20,000 ரூபாய் வரை வசூல் செய்யபடுகிறது. அதே போல விமானப் போக்குவரத்து கட்டணங்களை பொறுத்தவரை, குறிப்பாக சென்னையில் இருந்து அகமதாபாத் செல்லும் விமானங்கள் கட்டணம் அதிகரித்துள்ளது.
பொதுவான நாட்களில் விமான கட்டணங்கள் 12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை இருக்கும் நிலையில், தற்போது 25 ஆயிரம் ரூபாய் வரை கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு இடங்களில் இருந்து விமான போக்குவரத்துக்கான கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டிக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.