ஒருநாள் போட்டிக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி ; இரண்டு இடங்கள் முன்னேறிய விராட் கோலி...!
இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும் இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் மொத்தம் 302 ரன்கள் குவித்து அசத்திய விராட் கோலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய வீரர் ரோகித் சர்மா (781 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். தென் ஆப்பிரிக்க தொடரில் அசத்திய விராட் கோலி (773 புள்ளிகள்) இரு இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். முன்னதாக இவர் நான்காவது இடத்தில் இருந்தார். இதன் காரணமாக டேரில் மிட்செல் ஒரு இடம் சரிந்து 3-வது இடத்திற்கும், இப்ராஹிம் சத்ரன் ஒரு இடம் சரிந்து 4-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ரஷித் கான் மாற்றமின்றி முதலிடத்தில் தொடர்கிறார். இந்த தரவரிசையில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் ஆல் ரவுண்டர்கள் வரிசையில் மாற்றமில்லை. அஸ்மத்துல்லா ஓமர்சாய் முதலிடத்தில் தொடர்கிறார். இந்திய தரப்பில் அக்சர் படேல் 10-வது இடத்தில் உள்ளார்.