ICC Champions Trophy | “வந்து விளையாடிட்டு அன்னைக்கே Return ஆகிருங்க” - புதிய யோசனை கூறிய #Pakistan கிரிக்கெட் வாரியம் - ஏற்குமா #BCCI ?
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. போட்டிகளை லாகூர், ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்திய அணி கடைசியாக கடந்த 2008-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. அதன் பின், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில்லை. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இந்திய அணி மறுத்து வருகிறது.
இந்நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் முறையில் நடத்தவும் ஐசிசி திட்டமிட்டு வருகிறது. அதன்படி, இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபை அல்லது இலங்கையில் நடத்தப்படலாம் என்ற ஆலோசனையும் பரிசீலனையில் உள்ளது. பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியை விளையாட வைக்க புதிய யோசனையை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முன்மொழிந்துள்ளது. அதன்படி, போட்டி நடைபெறும் நாள்கள் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடிவிட்டு அதேநாளில் மீண்டும் இந்தியாவுக்கே சென்றுவிடலாம் என்ற யோசனையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்மொழியாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில், “இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தானில் விளையாட தயங்கும் பட்சத்தில், இந்திய அணி போட்டி நாள்களில் பாகிஸ்தானில் விளையாடிவிட்டு மீண்டும் அதே நாளில் புது டெல்லிக்கோ அல்லது சண்டீகருக்கோ உடனே சென்றுவிடலாம். அதற்கேற்றவாறு அவர்களது பயணம் தொடர்பான விமான அட்டவணையை அமைத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கான போட்டிகளை லாகூரில் நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் லாகூர் இருப்பதால் இந்திய அணிக்கான போட்டிகளை லாகூரில் நடத்த பாகிஸ்தான் முன்மொழிந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக பிசிசிஐ தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. சாம்பியன்ஸ் டிராபி தொடரை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி திட்டமிட்டு வரும் நிலையில், இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடினாலும் அல்லது விளையாடாவிட்டாலும் இறுதிப்போட்டியானது லாகூரில் நடத்தப்பட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.