Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“எம்.எல்.ஏ. என்று கூட பார்க்க மாட்டேன்... கடலில் தூக்கி வீசி விடுவேன்” - யாருக்கு எச்சரிக்கை விடுத்தார் ராமதாஸ்?

''கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன்; யாரும் கவலைப்பட வேண்டாம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு...
07:48 AM May 12, 2025 IST | Web Editor
''கூட்டணி குறித்து முடிவு செய்வதற்கு நான் இருக்கிறேன்; யாரும் கவலைப்பட வேண்டாம்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேச்சு...
Advertisement

பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்கக் கொடியை ஏற்றி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த மாநாட்டில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

இந்த விழாவில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

“10.5. 10.5, 10.5 எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறோம். ஆனால் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே 10.5% இடஒதுக்கீடு வழங்காததால், போராட்டத்தை அறிவிக்கிறோம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாக தான் இருக்கும். அந்த போராட்டத்திற்காக எவ்வளவு தியாகத்தை செய்யவும் தயாராக இருக்கிறோம்.

45 வருடமாக உங்களுக்காகவும், அனைத்து சமூதாய மக்களுக்காகவும் போராடியும், போராடி சில வெற்றியும் பெற்றவன் இந்த ராமதாஸ். இந்தியாவிலே சமூகநீதிக்காகவும், இடஒதுக்கீட்டிற்காகவும் என்னை போன்று வேறு யாராவது ஒரு மனிதர் போராடியிருக்கிறார்களா? என்னைப் போன்று யாருமில்லை. ஆனால், நான் இந்த சமுதாயத்தில் பிறந்ததால் வெளியே தெரியவில்லை.

வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என தமிழ்நாடு முழுக்க அனைத்து திசைகளிலும் பயணித்து, 95,000 கிராமத்திற்கும் பயணித்துள்ளேன். என் காலடி படாத கிராமமே தமிழ்நாட்டில் இல்லை. நாமும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆள வேண்டும் எனும் எண்ணத்தோடு என் பேச்சை ஒரு முறை கேளுங்கள். நான் ஆளப்போவதில்லை. எனக்கு ஆள வேண்டும் எனும் ஆசை கிடையாது. அப்படி இருந்திருந்தால், நான் இந்தியாவில் ஆளுநராகவும், அமைச்சராகவும் இருந்திருப்பேன். நான் மக்களுக்காக வாழ்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், தம்பி என உரிமையுடன் நேரடியாக வாதாடி 10.5% வழங்க சொல்லி முறையிட்டிருக்கிறேன். ஒரு தொகுதியில் 2000 இளைஞர்கள், இளம்பெண்கள் ஒவ்வொருவரும் ஒரு தொகுதியில் 100 வாக்குகளை கொண்டுவந்தால், அந்தத் தொகுதியில் நம்மால் வெல்ல முடியும். தமிழ்நாட்டில் 50 தொகுதிகளில் நாம்மால் எளிமையாக வெல்ல முடியும். அந்த பார்முலா சாதாரணமான ஒன்று.

ஆனால், நிறைய பேர் இங்கு உழைக்காமல், ஏமாற்றிக்கொண்டிருப்பது எனக்கு தெரியும். நான் வலுவாக உள்ளேன். இன்னும் உங்களுக்காக உழைக்க வலுவாக இருக்கிறேன். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான், உங்கள் குடும்பத்தினரின் ஓட்டை பெற வேண்டும். அதுபோதும் நாம் ஆட்சியில் அமர்ந்துவிடலாம்.

காலையில் எழுந்ததும் உலகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரே ஜீவன் இந்த ராமதாஸ் மட்டும் தான். தனியாக யானை சின்னத்தில் நின்று நான்கு தொகுதிகளில் அன்று வென்ற வரலாறு நமக்கு இருக்கிறது. இன்று கூட்டணியில் சேர்ந்து 5 தொகுதிகளில் தான் வென்றோம். இதனைக் கண்டு வெட்கமாக இல்லையா? கோவம் வரவில்லையா?.

காரணம் நம்மாள், நம்மாளையே காட்டிக்கொடுக்கிறார்கள். நம்மாள் நமக்கே ஓட்டுப் போடவில்லை. இனி அப்படி இருந்தால், உங்கள் அனைவரின் கணக்கையும் முடித்து விடுவேன். அதாவது உங்கள் பொறுப்புகள் அனைத்தும் பறிக்கப்படும். அந்த பதவியை ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடாத ஒரு இளைஞனிடம் கொடுத்துவிடுவேன். எம்.எல்.ஏ. என்று கூட பார்க்க மாட்டேன், கடலில் தூக்கி வீசி விடுவேன். உங்கள் கணக்குகள் பார்க்கப்படுகிறது.

எனவே இனி சும்மா ஏமாற்றிக்கொண்டு இருக்க முடியாது. உங்களை நம்பி தேர்தலில் இறங்கினால் அவ்வளவு தான். சிலர் கூட்டணி பற்றி பேசுகிறார்கள். கூட்டணியை பற்றி முடிவெடுக்க நான் இருக்கிறேன். அதனை நான் முடிவு செய்வேன். உங்களுக்கு அந்தக் கவலை வேண்டாம். உனக்கு எம்.எல்.ஏ சீட் கிடைக்க வேண்டுமென்றால் நாளைக்கே போய் உழை. இனிமேல் உழைக்க வேண்டும்.

ஒரு பொதுக்குழுவில், “கோலூன்றியாவது நடந்து இந்த ஊமை ஜனங்களுக்காக போராடுவேன் என்றேன். இன்றும் அதையே சொல்கிறேன். வெளி வேஷம், வெளி பேச்சு, கூட்டணி குறித்த பேச்சு, கட்சிக்குள்ளே கூட்டணி இனி இதுவெல்லாம் நடக்காது. எனவே உன்னை நீ திருத்திக்கொள். இல்லை என்றால் உன்னால் இந்தக் கட்சியில் பொறுப்பிலேயே இருக்க முடியாது. அது யாராக இருந்தாலும் சொல்கிறேன். உங்களின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கிறது. உங்கள் பதவிக்கு இளம் சிங்கங்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

நீங்கள் காலை வாறிக்கொண்டிருக்கிறாய். இனி அது நடக்காது. நடக்க விடமாட்டேன். என்னை வயசாயிடுச்சினு சொல்லி ஏமாத்த பார்க்காதீங்க. இந்தக் கட்சி அல்லது இந்தச் சங்கம் தனிப்பட்டவரின் சொத்து அல்ல. இந்த கட்சியை தொடங்கும்போது என்னிடம் காசு இல்லை. ஆனால் இன்றைக்கு பலர் சொகுசு காரில் வருகிறீர்கள். எனது ஆசை நாம் ஆள வேண்டும். அதற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டும்” என ராமதாஸ் பேசினார்.

ஏற்கெனவே அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே கட்சி ரீதியாக சலசலப்பு இருந்து வரும் நிலையில், நேற்று அன்புமணி அருகில் அமர்ந்தவாறே ராமதாஸ் இவ்வாறு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Anbumani RamadossChithirai ConferenceMamallapuramPMKRamadoss
Advertisement
Next Article