"அன்பு, அமைதி வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்" - ரமலான் பண்டிகையை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து!
இஸ்லாமியர்களின் மிக முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக ரமலான் இருக்கிறது. இது, இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதமாகும். இந்த மாதத்தில்தான், இஸ்லாமியர்களின் புனித நூலான குரான் அருளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும். அதன்படி, கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்த இஸ்லாமியர்கள் நோன்பு கடைபிடித்தனர்.
ரமலான் பண்டிகையானது, இந்த மாதத்தில் வானில் தோன்றும் பிறையின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 31) பிறை தென்பட்டதை தொடர்ந்து இன்று ரமலான் பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இது ரமலான் என்றும் ரம்ஜான் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் பண்டிகையை ஒட்டி தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,
"நோன்பிருந்து உறவுகளுடன், நட்பு நெஞ்சங்களுடன் அன்பைப் பரிமாறி... ஈகைத் திருநாளாம் ரமலான் திருநாளைக் கொண்டாடும், உலகெங்கும் வாழும் இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகள். இந்நாளில் அனைவரிடமும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை, வளர்பிறையாக வளர வாழ்த்தி மகிழ்கிறேன்"
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.