Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”பஹல்காம் தாக்குதலை பயன்படுத்தி மாநில அந்தஸ்து கோர மாட்டேன்” - முதலமைச்சர் உமர் அப்துல்லா!

ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றம்.
05:00 PM Apr 28, 2025 IST | Web Editor
Advertisement

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக அம்மாநில சட்டப்பேரவையில் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று காலை கூடியது. சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுதரி, ஏப்.22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

Advertisement

தொடர்ந்து சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய முதலமைச்சர் உமர் அப்துல்லா,

“மக்கள் நம்முடன் இருக்கும்போது தீவிரவாதம் அல்லது பயங்கரவாதம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்திற்கு எதிரான மக்களின் கோபத்தைக் கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், இதுவே அதன் முடிவின் தொடக்கமாகும். மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கக்கூடாது.

துப்பாக்கியால் ஒரு பயங்கரவாதியை நாம் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அந்த நேரம் வந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். அதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றத்தை வலுப்படுத்த முயற்சிப்போம்.

இந்த தருணத்தை பயன்படுத்தி மாநில அந்தஸ்தை கோர மாட்டேன். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எந்த முகத்துடன் மாநில அந்தஸ்து கேட்க முடியும்? எனது அரசியல் அவ்வளவு மோசமானதா?. நாங்கள் கடந்த காலங்களிலும் மாநில அந்தஸ்து பற்றிப் பேசியுள்ளோம். எதிர்காலத்திலும் அதுகுறித்து பேசுவோம். ஆனால், 26 பேர் கொல்லப்பட்டுவிட்டனர், அதனால் எங்களுக்கு மாநில அந்தஸ்து கொடுங்கள் என்று மத்திய அரசிடம் கேட்பது எனக்கு அவமானம்.

இந்த சம்பவம் முழு நாட்டையும் பாதித்துள்ளது. கடந்த காலங்களிலும் இதுபோன்ற பல தாக்குதல்களை நாம் பார்த்திருக்கிறோம். பைசரனில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இவ்வளவு பெரிய அளவிலான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இறந்தவர்களின் குடும்பங்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு விருந்தினரான சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்வது எனது கடமை. என்னால் அதனைச் செய்ய முடியவில்லை. மன்னிப்பு கேட்க வார்த்தைகள் இல்லை.

தந்தையை இழந்த குழந்தையிடமும், திருமணமான சில நாள்களில் கணவனை இழந்த மனைவியிடமும் என்னால் என்ன சொல்ல முடியும்?. விடுமுறையை கழிக்க வந்தோம், எங்கள் தவறு என்ன என்று கேட்கிறார்கள்?. நாங்கள் இதுபோன்ற தாக்குதலை ஆதரவளிக்கவில்லை, அங்கீகரிக்கவில்லை. 26 ஆண்டுகளில் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் மக்கள் ஒன்றுகூடி தாக்குதலைக் கண்டித்துள்ளனர். அனைவரும் ஒன்றுபட்டால் பயங்கரவாதம் முடிவுக்கு வரும்” எனத் தெரிவித்தார்.

தீர்மானம்;

தீர்மானத்தில், “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து இந்த அவை தனது அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கோழைத்தனமான கொடுமையான தாக்குதலை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது.

இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீரின் தனித்துவமான கலாச்சார அடையாளம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அவை ஆறுதலாக நிற்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறவர்களுக்கு அவை தனது இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறது.

பயங்கரவாதிகள் தாக்குதலின் போது அவர்களுடன் துணிச்சலுடன் போராடி சுற்றுலா பயணிகளைக் காக்க தனது இன்னுயிரை இழந்த சைது அடில் ஹுஸைன் ஷாவின் தியாகத்தை இந்த அவை போற்றுகிறது. அவரின் துணிச்சல் மற்றும் தன்னலமில்லாத தன்மை காஷ்மீரின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்துகிறது. மேலும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக செயல்படும்.

ஏப்.23-ம் தேதி நடந்த பாதுக்காப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு, மத்திய அரசு அறிவித்துள்ள தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை இந்த அவை அங்கீகரிக்கிறது”. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
J&K CMOmar AbdullahPahalgam Attackstatehood
Advertisement
Next Article