"பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய மாட்டேன்" - மிசோரம் முதலமைச்சர் அதிரடி!
சட்டசபை தேர்தல் பிரசாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி வரும் போது, அவருடன் ஒரே மேடையில் பங்கேற்க மாட்டேன் என மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா தெரிவித்துள்ளார்.
மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது, அதன் முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாகும். தேர்தலுக்கு முன், அக்டோபர் 30-ம் தேதி, பிரதமர் மோடி மேற்கு மிசோரமில் உள்ள மமித் கிராமத்திற்கு சென்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பேரணி நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மிசோரம் முதலமைச்சர் ஜோரம்தங்கா, மிசோரம் மக்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவர்கள். மணிப்பூரில் உள்ள மெய்தி மக்கள் நூற்றுக்கணக்கான தேவாலயங்களை எரித்த போது, மிசோரம் மக்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நேரத்தில் பாஜகவுக்கு அனுதாபம் காட்டுவது எனது கட்சிக்கு பெரிய மைனஸ் பாயிண்டாக இருக்கும்.
இப்படிப்பட்ட நிலையில்,பாஜகவுக்கு எங்கள் கட்சி ஆதரவு காட்டுவது சரியாக இருக்காது. பிரதமர் தனியாக வந்து அவர் மேடையில் ஏறினால் நன்றாக இருக்கும், நான் மற்ற மேடையில் ஏறினால் நன்றாக இருக்கும் என்றார்.