”வேந்தர் விவகாரத்தில் அன்றே முடிவெடுத்த ஜெயலலிதாவை மனமுவந்து பாராட்டுகிறேன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..
பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருந்தால்தான் அப்பல்கலைகழகங்கள் வளர்ச்சி பெறும், என்பதை உணர்ந்து செயல்பட்ட ஜெயலலிதாவின் நடவடிக்கையை மனமுவந்து பாராட்டுவதாக பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“ தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். இசைக்கும் என் குடும்பத்துக்கும் நெருக்கமான உறவு உண்டு. பாட்டு எழுதுவதிலும், பாடுவதிலும் என் தாத்தா முத்துவேலர் வல்லவர். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கவிதைகளுடன் சினிமா பாடல்களும் எழுதி உள்ளார்.
பாட்டு பாடாவிட்டாலும் எல்லா இசை நுணுக்கமும் அவருக்கு தெரியும். இசையை கேட்டவுடன் அதில் சரி, தவறு கண்டுபிடித்து விடுவார். அதேபோல எனது மாமா சிதம்பரம் ஜெயராமன் சிறந்த பாடகர். இந்தியாவில் இசைக்காக உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமை இப்பல்கலைக்கழகத்திற்கு உண்டு.
இப்பல்கலைக்கழகம் முழுவதும் மாநில அரசு நிதி உதவியுடன் செயல்படுகிறது. மேலும் மாநிலத்தை ஆளும் முதல்வரே வேந்தராக இருக்கும் உரிமை இந்த பல்கலைக்கழகத்திற்கு மட்டும்தான் உண்டு. நான் அரசியல் பேசவில்லை , எதார்த்தத்தை பேசுகிறேன். முதலமைச்சர்களே வேந்தர்களாக இருந்தால்தான் அந்த பல்கலைக்கழகம் வளர்ச்சி அடையும். மற்றவர்கள் கையில் இருந்தால், அதன் நோக்கமே சிதைந்துவிடும் என்று உணர்ந்ததால்தான் 2013 ம் ஆண்டிலேயே அன்றைய முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்து, இப்பல்கலைக்கழகத்திற்கு வேந்தராக முதலமைச்சரை அறிவித்தார். இதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை நான் மனமுவந்து பாராட்டுகிறேன் என்றார்.
பாடகி சுசீலாவின் ரசிகன் நான். அவரது பாடல்களை இரவில் பயணத்தின்போது
நான் தவறாமல் கேட்பேன். அவரது பாடல்களில் நீ இல்லாத உலகத்திலே.. நிம்மதி இல்லை.. நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை. என்ற பாடல் எனக்கு பிடித்தமானது. பல்கலைகழகங்கள் சிறப்பாக செயல்பட அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக, முதலமைச்சர்களே இருக்க வேண்டும்.
பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கில் உச்ச நீதிமன்றம் மூலம் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்ப்போம் என்றார். மாநில அரசின் உரிமையை நிலைநாட்டும் வகையில் நீதிபதிகள் நேற்று கருத்து தெரிவித்துள்ளனர். ஒத்திசைவு பட்டியலில் இருந்து, மாநிலப் பட்டியலுக்கு கல்வியை மாற்றினால்தான் எல்லோருக்கும் கல்வி , எல்லோருக்கும் உயர்க்கல்வி என்ற இலக்கை மாநிலங்கள் எட்ட முடியும். இது அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். சமூக நீதியை காக்கும் வகையில் இப்பல்கலைகழகம் அமைந்துள்ளது. 1997 ல் இதன் உறுப்புக் கல்லூரியான திருவையாறு கல்லூரியை தொடங்கியவர் கருணாநிதி.
முதன் முறையாக இப்பல்கலைக்கழகத்தில் இன்று ஆராய்ச்சிப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக் கழகத்திற்கு அரசு வழங்கும் மானியம் அடுத்த கல்வி ஆண்டு முதல் ரூ.3 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். மேலும் அப்பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மையம் மற்றும் நூலகம் அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் ” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.