Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

5 முக்கிய பிரச்னைகளை மக்களவை கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட துரை வைகோ!

06:52 AM Jul 04, 2024 IST | Web Editor
Advertisement

நாட்டின் 5 முக்கிய பிரச்னைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன் என நாடாளுமன்ற மக்களவையில் துரை வைகோ எம்.பி தெரிவித்தார். 

Advertisement

இந்திய நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்குப் பிறகு கடந்த ஜூன் 24 ஆம் தேதி முதன்முறையாக நாடாளுமன்றம் கூடியது. ஜூன் 25 ஆம் தேதி மக்களவை உறுப்பினராக நாடாளுமன்றத்தில் மதிமுக கட்சியின் முதன்மை செயலாளரும்,  மக்களவை திருச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துரை வைகோ பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் ஜூலை 2ம் தேதி பங்கேற்று துரை வைகோ எம்.பி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது :

"இலங்கை கடற்படையால் பாதிக்கப்படும் பெரும்பாலான மீனவர்கள் பின்தங்கிய ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதுவரை 3020 மீனவர்கள் கைது செய்யப்பட்டு 340 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நமது மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கட்சத்தீவை மீட்கவும், தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டவும் மத்திய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறு, காவிரி, வைகை, குண்டாறு ஆகிய தென்னக நதிகளை இணைப்பது முழு தீபகற்பப் பகுதிக்கும் வரப்பிரசாதமாக அமையும் எனக் கூறி, காவிரி - வைகை - குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு மாநில சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.7000 கோடி இதற்கு தேவைப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு தனது சிறிய ஆதாரங்களுடன் இப்பணியை ஏற்கனவே முன்னெடுத்துள்ளது.  தீபகற்ப நதிகளை இணைக்கும் முழுத் திட்டத்தை தொடங்கவும், நிதி அளிக்கவும் மத்திய அரசு முன் வரும் என நம்புகிறேன்.

இதனால் 5 மாநிலங்களின் வறட்சி பாதித்த பகுதிகள் குறிப்பாக, எனது தொகுதிக்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை பகுதிகள் பயனடையும். தென்னக நதிகள் இணைப்பால் ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் பயனடைவார்கள். ஆகவே, தேவையான முன் முயற்சிகளை மத்திய அரசு எடுக்க வேண்டும்.

மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியபோது, அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடுமையான வெயிலிலும், மழையிலும், பட்டியினியிலும் போராட்டம் நடத்தினார்கள். இருப்பினும் அவர்களின் குரல்கள் ஒடுக்கப்பட்டன. விவசாயிகள் தாக்கப்பட்டனர். அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை பெற்றுத்தரவும், விவசாயிகளுக்கு நிலையான சூழலை உருவாக்கவும் மத்திய அரசு தவறிவிட்டது. அவர்களின் போராட்டங்களை மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை. ஆகவே, விவசாயிகளுக்கு நம்பிக்கையையும், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதையும் படியுங்கள் : இயங்காத பெட்ரோல் பங்கில் 2000லிட். மெத்தனால் பதுக்கல் - விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் மற்றும் இதர தேர்வுகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை நீக்குவதற்கு உண்டான வழிமுறைகள் எதுவும் குடியரசு தலைவர் உரையில் இடம்பெறாததற்கு வருந்துகிறேன். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா 2022 -க்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

நீட் தேர்வின் பாதிப்புகளை குறிப்பிட்டு, ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வை முழுமையாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன். நான் மதிமுக சார்பிலோ,  இந்தியா கூட்டணி சார்பிலோ,  எந்த ஒரு சித்தாந்தத்தின் சார்பிலோ பேசவில்லை. ஆனால் நான், சாமானியர்களின் சார்பாகவும், விவசாயிகளின் சார்பாகவும், மாணவர்கள், தொழிலாளர்கள், ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகவும் பேசுகிறேன். அரசியல் எல்லைகள், சித்தாந்தங்களை தாண்டி சாதாரண மக்களுக்கு சேவை செய்வோம். அவர்களை அரவணைப்போம் என இந்த அவையின் முன்பு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு துரை வைகோ எம்.பி உரையாற்றினார்.

Tags :
Durai vaikoimportant issuesIndialok sabhaMDMKmpparliamentRahul gandhispeechTamilNadu
Advertisement
Next Article