கமல்ஹாசனை நேரில் சந்திக்கவே 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை எடுத்தேன் - இயக்குநர் சிதம்பரம்
கமல்ஹாசனை நேரில் சந்திக்கவே 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை எடுத்தேன் என இயக்குநர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான படம் மஞ்சும்மெல் பாய்ஸ். சிதம்பரம் இப்படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீநாத் பாஸி , செளபின் சாஹிர் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். கொடைக்கானல் குணா குகையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் , மலையாளம் என இருதரப்பு ரசிகர்களிடமும் பாராட்டுக்களைப் பெற்று வசூல் அள்ளி வருகிறது.
சந்தான பாரதி இயக்கிய குணா படத்தை மிக சிறப்பான முறையில் ஒரு ரெஃபரன்ஸாக இப்படத்தில் இயக்குநர் சிதம்பரம் பயன்படுத்தி இருக்கிறார். ஒருவகையில் இப்படம் கமல்ஹாசனின் குணா படத்திற்கு புகழாரம் சூட்டுவதுபோல் அமைந்துள்ளது. இப்படியான நிலையில் மஞ்சும்மெல் படத்தின் இயக்குநர் சிதம்பரம் நேர்காணல் ஒன்றில் கமல் குறித்து பேசியுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நேர்காணலில் பேசிய இயக்குநர் சிதம்பரம் “நான் ஒரு மிகப்பெரிய கமல் ரசிகன். கமலின் விருமாண்டி படம் எனக்கு ஒரு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது. அவர் வெறும் ஒரு நடிகர் மட்டுமில்லை. கமல் சினிமாவுக்காகவே பிறந்தவர். ஐந்து வயதில் இருந்து சினிமாவில் இருப்பதால் அவரது 30 வயதை நெருங்கும்போதே ஒரு மாஸ்டராக மாறிவிட்டார். இன்று எல்லா தொழில்நுட்ப வசதிகளும் இருக்கின்றன. இந்த எல்லா வசதிகள் இருந்து நாங்கள் இந்தப் படத்தை எடுத்திருக்கிறோம். ஆனால் 30 வருஷத்திற்கு முன்னாடியே எந்த வித தொழில்நுட்ப வசதியும் இல்லாமல் ஒரு படத்தையே அந்த குகையில் எடுத்திருக்கிறார் என்று நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கிறது “ என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். நடிகர் கமல்ஹாசனின் தீவிரமான ரசிகர் இயக்குநர் சிதம்பரம். கமல்ஹாசனை நேரில் சந்திக்கலாம் அவரது கவனத்தை பெறலாம் என்பதற்காகவே 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தை எடுக்க முக்கியக் காரணம் எனத் தனது சமீபத்திய பேட்டியில் சிதம்பரம் சொல்லியிருந்தார்.
அவரது விருப்பம் தற்போது நிறைவேறியுள்ளது. 'மஞ்சும்மல் பாய்ஸ்' படக்குழுவினரை கமல்ஹாசன் மற்றும் சந்தானபாரதி சந்தித்து பாராட்டி இருக்கிறார்கள். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.