"உங்களை அன்போடும் பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்" - தொண்டர்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்!
பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ வருகிற மே 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே, மாநாடு நடைபெறும் மே 11 அன்று ஈசிஆர் மற்றும் ஓஎம்ஆர் சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது,
"அனைவருக்கும் வணக்கம். நான் மாமல்லபுரம் திருவிடந்தை கிராமத்தில் சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறும் திடலில் உள்ளேன். உங்கள் வருகைக்காக நான் காத்துக்கொண்டுள்ளேன். நாளை மறுநாள் நாள் உங்களை இங்கே சந்திக்க உள்ளேன். மகிழ்ச்சியான இந்த தருணத்தில் உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை விடுக்க உள்ளேன். நீங்கள் பத்திரமாக வந்து திரும்பி பத்திரமாக செல்ல வேண்டும் என்பதுதான் எனது முதல் கடமையாக பார்க்கிறேன். நீங்கள் இங்கு வரும்போது அமைதியாக பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் வரவேண்டும். திரும்பி வீட்டிற்கு செல்லும்போதும் அவ்வாறுதான் செல்ல வேண்டும். நீங்கள் வீட்டிற்கு செல்லும்வரை எனக்கு தூக்கம் இருக்காது.
காவல்துறை சொல்வதை நீங்கள் கேட்டு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். வழியில் ஏதேனும் சலசலப்பு இருந்தாலும் அதனை கண்டுக்கொள்ளாமல் அமைதியாக இருங்கள். இந்த மாநாடு வெற்றி பெற்று, தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், 69 விழுக்காடு பாதுகாக்கப்பட வேண்டும் வன்னியர்கள் உட்பட அவரவர் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், கிரீமி லேயரை மத்திய அரசு அகற்ற வேண்டும், இட ஒதுக்கீடு 59 விழுக்காடு உச்ச வரம்பை மத்திய அரசு அகற்ற வேண்டும், போதை பொருட்களை ஒளிக்க வேண்டும் என்பது தான் நமது இலக்கு.
இதற்காகத்தான் இந்த மாநாட்டை நடத்துகின்றோம். இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் நம் சொந்தங்கள் வரவுள்ளனர். உங்களுக்கு தேவையான பல ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம். கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. நீங்கள் அனைவரும் அமைதியாக பத்திரமாக வந்து செல்ல வேண்டும் என்று அன்போடும் பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.