சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும் - ஆளுநருக்கு அமைச்சர் பொன்முடி மீண்டும் வலியுறுத்தல்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யாவிற்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டுமென அமைச்சர் பொன்முடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூற தவறியதாக, சுதந்திரப்
போராட்ட வரலாற்றையே தெரிந்தவர் போல் ஆளுநர் கருத்து தெரிவித்து இருக்கிறார் . அதற்கான பதிலை திமுக பொருளாளரும் நாடாளுமன்ற குழு தலைவருமான டி.ஆர். பாலு தெரிவித்து விட்டார்.
சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது திடீர் அக்கறை காட்டும் தமிழ்நாடு ஆளுநர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் நிச்சயம் ஒப்புதல் அளிப்பார் என்று நம்பிக்கை உள்ளது.
ஆளுநருக்கு உண்மையிலேயே தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறை இருக்குமானால் மதுரை பல்கலைக்கழகம் ஆட்சிக் குழு மற்றும் ஆட்சி பேரவை இரண்டும் சேர்ந்து ஆகஸ்ட் 18, செப்டம்பர் 20 ஆகிய தேதிகளில் சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கக் கோரி அனுப்பி வைத்த கடிதங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
சங்கரய்யா மக்களுக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, தன் கல்லூரி படிப்பை நிறுத்தி விட்டு 9 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். அவரை கெளரவிக்கும் வகையில் தமிழக அரசு தகைசால் விருது சங்கரய்யாவிற்கு வழங்கியது.
இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.