“2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெல்வோம் என இறுமாப்புடன் சொல்கிறேன்” - கனிமொழி எம்.பி. பேச்சு!
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளிலும் வெல்வோம் என இறுமாப்புடன் சொல்வதாக தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு கனிமொழி எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தனியார் திருமண மஹாலில் திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு தென்மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மூத்த உறுப்பினர்களுக்கு நிதி உதவிகளை வழங்கினார்.
பின்னர் மேடையில் பேசிய கனிமொழி எம்.பி.,
“ஆதி திராவிட மக்களுக்கு சுயமரியாதை முதல் அனைத்தையும் பெற்றுத் தந்த இயக்கம் திமுகதான். ஜாதி, மத வித்தியாசங்கள் இன்றி மனிதர்களாய் அனைத்து மக்களும் வாழும் வகையில் சமத்துவபுரத்தை உருவாக்கியது திமுகதான். காலங்கள் மாறினாலும் திமுக மீதான விமர்சனங்கள் மாறவில்லை. திமுகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்த்தாலே திமுகவை வெற்றிபெற யாரும் இல்லை.
ஆதி திராவிட மக்களுக்கு செய்த சாதனைகளே பெரிய பட்டியலாக உள்ளது. தமிழ்நாட்டில் மக்களை பிரித்து குழப்பங்களை உருவாக்க சிலர் முயற்சிக்கிறார்கள். 'வெற்றி மக்கள் கரங்களில் இருக்கிறது என்று பணியாற்றினால் வெற்றி நிச்சயம். முதலமைச்சர் சொன்னதுபோல அடுத்த தேர்தலில் தமிழகத்தில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம். இறுமாப்புடன் சொல்கிறேன். வெற்றி நிச்சயம், நிச்சயம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.