"மக்களை சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் வரும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் 1,256 உயர்தர மருத்துவ மையங்களில் 17 சிறப்பு மருத்துவ சேவைகள் வழங்கப்படும். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
"நாட்டு மக்களின் நலனே என்னுடைய நலன். மருத்துவமனையில் இருந்தாலும் மக்கள் பணி ஆற்றுவது தான் என் விருப்பம். தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், கல்வியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. கல்வியும், மருத்துவமும் திமுக ஆட்சியின் இரு கண்கள். கல்விக்காகவும் மருத்துவத்திற்காகவும் திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை கொண்டு வந்துள்ளது.
கொரோனா காலத்தில் நிதி உதவி அளித்து மக்களை காக்கும் அரசாக இருந்தோம். உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஐ.நா. சபையே விருது கொடுத்து பாராட்டி உள்ளது. என்னை பொறுத்தவரை திமுக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைய வேண்டும். மக்களை சந்தித்தால் தான் எனக்கு உற்சாகம் வரும்.
"நலம் காக்கும் ஸ்டாலின்" திட்டத்தில் மாற்றுத்திறனாளி, மனநல பாதிப்பு, இதய நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோல், எந்த ஒரு திட்டம் கொண்டு வந்தாலும் அதில் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பது தான் எங்களது நோக்கம். மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் மருத்துவ சேவை அளிக்கவே நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவை, கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தான் புதிய திட்டம் தொடங்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.