நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை - நடிகை ராஷ்மிகா மந்தனா பேட்டி!
நான் கூர்க்கில் இருந்து வந்த பெண். நான் நடிகை ஆவேன் என்று கூட நினைக்கவில்லை. எனக்கு இதுபோன்ற பெரிய நடிகர்கள் உடன் நடிப்பது பெருமையான விஷயம் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
அர்ஜூன் ரெட்டி படத்திற்குப் பின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் 'அனிமல்'. இப்படத்தை டி சீரியல் மற்றும் சினீ 1 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அனில் கபூர், பாபி தியோல், பிரனீதி சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் அடுத்த மாதம் 1-ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாகிறது. இதனையொட்டி இன்று சென்னையில் இப்படத்தை விளம்பரப்படுத்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
”பெரிய நடிகர்களின் படங்களில் நான் இருப்பதற்கு எந்த வித ரகசியமும் இல்லை. ஒரு படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த படத்தின் கதையை கேட்பேன். இயக்குனரை நம்புவேன், அதற்குமேல் என் கையில் எதுவுமில்லை. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி சொல்ல வேண்டும் என்றால் எல்லா அனிமலுக்கும் நான்தான் ஜூ கீப்பர்.
தென்னிந்திய நடிகர்களுடன் நடிக்க வேண்டுமா அல்லது வடஇந்திய நடிகர்களுடன் நடிக்க வேண்டுமா என்பது இயக்குநரின் பார்வை, எனக்கு கதைதான் முக்கியம். இயக்குனரின் பார்வை என்ன என்பது முக்கியம். நான் கூர்க்கில் இருந்து வந்த பெண். நான் நடிகை ஆவேன் என்று கூட நினைக்கவில்லை. எனக்கு இதுபோன்ற பெரிய நடிகர்கள் உடன் நடிப்பது பெருமையான விஷயம்.
தற்போது மிகப்பெரிய நபர்களுடன் மேடையில் அமர்ந்துள்ளேன். இதுவே எனக்கு பெருமையாக இருக்கிறது. என்னை பொறுத்தவரையில் எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புகளுக்கும் நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக நினைக்கிறேன்.” இவ்வாறு தெரிவித்தார்.