“மஜத வேட்பாளர் பிரஜ்வலின் பிரச்னைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” - குமாரசாமி பேட்டி!
கர்நாடக மாநில ஹாசன் தொகுதி மஜத வேட்பாளர் பிரஜ்வல் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், ‘அவரது பிரச்னைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என கர்நாடகவின் முன்னாள் முதலமைச்சரும், பிரஜ்வலின் சித்தப்பாவுமான எச்.டி.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 லோக்சபா தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஏப்ரல் 26-ந் தேதி ஹாசன் உள்ளிட்ட 14 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. எஞ்சிய தொகுதிகளுக்கு மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் ஏப்.26 ஆம் தேதி தேர்தலுக்கு முன்பு, ஹாசன் தொகுதி முழுவதும் பாஜக கூட்டணி மஜத வேட்பாளரும், முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் பேரனும், மஜத கட்சி தலைவர் ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோக்களாக பிரஜ்வல் ரேவண்ணா பதிவு செய்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் நாகலட்சுமி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில் எஸ்.ஐ.டி. விசாரணைக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணா, இந்தியாவை விட்டே தப்பி ஓடி ஜெர்மனியில் பதுங்கிவிட்டார்.
“மூன்று நாட்களுக்கு முன் யார் இந்த வீடியோவை வெளியிட்டார்கள். இதை ஏன் இந்த நேரத்தில் வெளியிட வேண்டும். இதை ஏன் முன்னரே வெளியிடவில்லை? தேர்தல் நேரத்தில் ஏன் பழைய பிரச்னைகளை கொண்டு வர வேண்டும்? சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. உண்மை வெளிவந்த பிறகு குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்படும். பிரஜ்வலின் மீதான விமர்சனங்கள், தேர்தல் முடிவுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என பிரஜ்வால் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
பிரஜ்வல் இந்தியாவை விட்டு தப்பியது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, என்னை கேட்டால் அவர் தினமும் செல்கிறார்? அவரை கொண்டு வருவதற்கான அனைத்து வேலைகளையும் அரசு பார்க்கும். அதற்கு முன்னர் எங்களுக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாளும் அவர் என்ன செய்கிறார் என்பதை என்னால் பார்த்து கொண்டிருக்க முடியாது. இது ரேவண்ணாவின் குடும்பப் பிரச்சினை. நாங்கள் அனைவரும் தனித்தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவரது பிரச்னையை அவர் பார்த்துகொள்வார். எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.