“பேரூராட்சி தலைவர் மீது நடிவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரமில்லை” - தூய்மை பணியாளர் மரண வழக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதில்!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகிலுள்ள உடன்குடி பேரூராட்சியில்,
தூய்மைப்பணியாளர் சுடலைமாடனை, திமுக பேரூராட்சி தலைவரின் மாமியார் சாதியை சொல்லி இழிவாக பேசியதால், மனமுடைந்து கடந்த 2022-ம் ஆண்டு உயிரை மாய்த்துக் கொண்டார். இதுதொடர்பாக திமுக பேரூராட்சி தலைவரின் மாமியார் ஆயிஷா கல்லாசி மற்றும் பேரூராட்சி செயலர் பாபு ஆகியோர் மீது வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், திமுக பேரூராட்சி தலைவர் ஹிமைரா ரமீஷ் பாத்திமா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் உங்களுடன் ஒருநாள் திட்டத்தின் கீழ் திருச்செந்தூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். அப்போது உயிரிழந்த தூய்மைப்பணியாளர் சுடலைமாடனின் மனைவி தங்கம்மாள்,
தன் கணவரின் இறப்பிற்கு காரணமான பேரூராட்சி தலைவர் ஹிமைரா ரமீஷ் பாத்திமா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டூம் என கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதையும் படியுங்கள் ; சாதிய வன்கொடுமையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்… 2 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!
அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் இளம் பகவத் பேரூராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தனக்கில்லை என மழுப்பலாக பதிலளித்துள்ளார். இதனால் அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். தூய்மைப் பணியாளரின் சாதி தீண்டாமை மரணத்தித்கு காரணமானவர்களுக்கு ஆதரவாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில், மாவட்ட ஆட்சியரின் பதில் பாதிக்கப்பட்டவர்களை மேலும் காயமடையச் செய்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.