Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"EPS ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என புரியவில்லை" - அமைச்சர் ரகுபதி விமர்சனம்

ஜெகபர் அலி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இபிஎஸ் ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என புரியவில்லை என்று அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
12:36 PM Jan 20, 2025 IST | Web Editor
Advertisement

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜெகபா் அலி (58). முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரான இவா், கனிம வள கொள்ளை நடப்பதாக அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், கடந்த வெள்ளிக்கிழமை ஜெகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

Advertisement

அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். கனிமவள கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிலர் ஜெகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து, விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"புதுக்கோட்டை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெபகர் அலி உயிரிழந்த சம்பவத்தில் முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவார்கள். சம்பவம் நடந்து சில மணி நேரங்களிலேயே சந்தேகத்திற்கிடமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஏன் இத்தனை அவசரப்படுகிறார் என்று புரியவில்லை.

லாரி ஓட்டிச்சென்ற லாரி டிரைவரை கைது செய்தது வழக்கை திசை திருப்பும் செயலா? முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி இவ்வாறு அவதூறு பரப்பலாமா? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தையே டிவியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தானே என்று கடந்து போக வேண்டுமா?"

இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

Advertisement
Next Article