"அந்த சம்பவம் ஞாபகம் இருக்குல்ல..." - ஆக்ஷனில் மிரட்டும் விக்ரம்... வெளியானது ‘வீர தீர சூரன்’ படத்தின் டிரெய்லர்!
தங்கலான் திரைப்படத்தைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் தனது 62வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.யு.அருண்குமார் இயக்குகிறார். இத்திரைப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ரியா ஷிபு இந்த படத்தை தயாரிக்கிறார்.
இப்படத்தில் விக்ரம் உடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சுரஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. தற்போது இப்படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளது. முதலில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு, முதல் பாகம் உருவாகும் என கூறப்படுகிறது.
இப்படத்தில் நடிகர் விக்ரம் கிராமிய தோற்றத்தில் ‘காளி’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் எஸ்.ஜே சூர்யா காவல் அதிகாரியாக நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் 27ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.