“பவதாரிணியின் குரலை இப்படி பதிவு செய்வேன் என நினைக்கவில்லை!” - 'The GOAT' படப் பாடல் குறித்து யுவன் சங்கர் ராஜா உருக்கம்!
பவதாரிணியின் குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருக்கமாக தெரிவித்துள்ளார்.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (G.O.A.T. – Greatest Of All Times) படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரசாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இதற்கிடையே விஜய் பாடிய முதல் பாடல் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனையடுத்து இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது. இந்நிலையில், 2வது பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என முன்னதாக அறிவித்து, அதன் புரோமோவை படக்குழு நேற்று வெளியிட்டது.
அதன்படி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் அந்த ‘சின்ன சின்ன கண்கள் பாடல் ‘ பாடல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த பாடலை விஜய் மற்றும் மறைந்த பாடகி பவதாரிணி குரலில் உருவாகியுள்ளது. கபிலன் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார். 1997-ம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை படத்துக்குப் பிறகு பவதாரணி – விஜய் குரல்கள் இணைந்து இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ளதும் ரசிகர்களிடம் வரவேற்பினைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில், “தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் இரண்டாவது சிங்கிள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. பெங்களூருவில் இந்தப் பாடலை நான் இசையமைத்த போது, நானும், வெங்கட்பிரபுவும் இந்தப் பாடலை சகோதரி பாடினால் சரியாக இருக்கும் என நினைத்தோம்.
அவர் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வந்ததும் அவருடைய குரலில் பாடலை பதிவு செய்யலாம் என நினைத்திருந்தேன்.ஆனால், ஒரு மணிநேரம் கழித்து அவர் மறைந்த செய்தி கிடைத்தது. அவருடைய குரலை இப்படி பயன்படுத்துவேன் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. எனது இசைக்குழுவினருக்கும், இந்த சாத்தியப்படுத்தியதில் பங்காற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது ஒரு விவரிக்க முடியாத தருணம்” என தெரிவித்துள்ளார்.