“உக்ரைன் போரை நான் தொடங்கவில்லை... எல்லாவற்றிற்கும் காரணம் பைடன்தான்” - அதிபர் ட்ரம்ப்!
உக்ரைனின் சுமி நகரில் ஞாயிறு குறுத்தோலையை கொண்டாட மக்கள் கூடியிருந்த போது, ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. ரஷ்யாவின் இந்த சமீபத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை குற்றம் சாட்டிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்,
“உங்களை விட 20 மடங்கு பெரிய ஒருவருக்கு எதிராக நீங்கள் போரைத் தொடங்கி, மக்கள் உங்களுக்கு ஏவுகணைகளைக் கொடுப்பார்கள் என்று நம்ப வேண்டாம். இந்த மில்லியன்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு மூன்று பேர்தான் காரணம். முதல் காரணம் புதின், நாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் இருந்த பைடன் இரண்டாவது, மூன்றாவது ஜெலன்ஸ்கி. ஒரு போரை தொடங்கும் முன்பு நாம் வெல்வோமா? என்பதை அறிய வேண்டும்” என செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய அதிபர் ஜெலன்ஸ்கி,
“தயவுசெய்து, உக்ரைன் விவகாரம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தை அல்லது முடிவுக்கு முன், உக்ரைனுக்கு வந்து இங்குள்ள மக்களை, போராளிகளை, வீரர்களை, தேவாலயங்களை, மருத்துவமனைகளை, போரில் காயமுற்ற அல்லது மரித்த குழந்தைகளைக் கண்ணால் பார்த்துவிட்டு அதன்பின் செயல்படுங்கள்” என்று பேசியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து இதற்கு விளக்கமளித்துள்ள ட்ரம்ப்,
“ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் பைடனின் போர், என்னுடையது அல்ல. நான் இப்போதுதான் இங்கு வந்தேன். ஆனால் என்னுடைய இன்னும் நான்கு ஆண்டுகால பதவியில் போரை தடுப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. இந்தப் போரில் எனக்கு எந்தத் தொடர்பும் இல்லை, ஆனால் மரணத்தையும், அழிவையும் நிறுத்த நான் விடாமுயற்சியுடன் பாடுபடுகிறேன்.
2020 அதிபர் தேர்தலில் மோசடி செய்யப்படாமல் இருந்திருந்தால், இந்த கொடூரமான போர் ஒருபோதும் நடந்திருக்காது” என தெரிவித்துள்ளார்.