“பெயர் விடுபட்டதால் வாக்களிக்க முடியவில்லை” - நடிகர் சூரி வேதனை!
நடிகர் சூரியின் பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டுப்போனதால், தன்னால் ஜனநாயக கடமையாற்ற முடியாதது மன வேதனையாக இருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18வது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று (ஏப். 19) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை முதல் நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள், திரை பிரபலங்கள் என அனைவரும் வாக்கு செலுத்தி வருகின்றனர். நடிகர்களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விக்ரம், தனுஷ், விஷால், விஜய் ஆண்டனி, அரவிந்த் சாமி, ஜி.வி.பிரகாஷ், யோகி பாபு, நடிகைகள் குஷ்பு. ஆண்ட்ரியா, திரிஷா, அதிதி என பலர் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் நடிகர் சூரியின் பெயர் விடுபட்டதால், தன்னால் வாக்கு செலுத்த முடியாதது மன வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது;
“என் ஜனநாயக உரிமையை செலுத்துவதற்காக வந்தேன். கடந்த அனைத்து தேர்தல்களிலும் எனது உரிமையை செலுத்தி வருகிறேன். ஆனால் இந்த முறை வாக்குச் சாவடியில் எனது பெயர் விடுபட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். என்னுடைய மனைவி பெயர் இருக்கிறது. என்னுடைய பெயர் இல்லை. என்னுடைய ஜனநாயக கடைமையை நிறைவேற்ற வந்தேன். அது நடக்கவில்லை என்பதால், மனவேதனையாக இருக்கிறது. இது எங்கு நடந்த தவறு, யாருடைய தவறு என தெரியவில்லை. ஓட்டு போட்டுவிட்டு, ஓட்டு போடுங்கள் என சொல்வதைவிட, ஓட்டு போடமுடியாத வேதனையுடன் கூறுகிறேன். தயவு செய்து அனைவரும் 100 சதவீத வாக்களியுங்கள். தவறாமல் அனைவரும் உங்களது வாக்குகளை செலுத்துங்கள். நானும் அடுத்த முறை எனது வாக்கை செலுத்துவேன்” என தெரிவித்துள்ளார்.