"பிரதமர் மோடி வரலாற்றை திரித்து தவறான கருத்தை பேசுவதை கண்டிக்கிறேன்" - செல்வப்பெருந்தகை!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த பதிவில், "பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரலாற்றை திரித்து தவறான கருத்தை பேசுவதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
இன்று ராஷ்ட்ரிய ஏக்தா திவாஸ் (Rashtriya Ekta Diwas) நிகழ்வில் குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றியபோது, 'சர்தார் வல்லபாய் பட்டேல் முழு ஜம்மு & காஷ்மீரையும் இந்தியாவுடன் இணைக்க விரும்பினார், ஆனால் ஜவஹர்லால் நேரு அதை அனுமதிக்கவில்லை' என்ற தவறான, வரலாற்று உண்மைக்கு புறம்பான கருத்தை தெரிவித்துள்ளார்.
1947 அக்டோபர் 26 அன்று ஜம்மு காஷ்மீர் இந்திய நாட்டுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது அன்றைக்கு இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு அவர்கள் உள்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தவர் சர்தார் வல்லபாய் பட்டேல் காஷ்மீரை இந்தியாவோடு இணைக்கும் சூழலில் பல்வேறு கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டது பாகிஸ்தான் காஷ்மீர் முழுவதையும் தங்கள் நாட்டோடு இணைத்துக் கொள்ள திட்டமிட்டு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டது அன்றைய சூழலில் காஷ்மீர் மக்கள் மத்தியில் தனி நாடாக இயங்குவது அல்லது இந்தியாவோடு இணைய வேண்டும் என இரண்டு வழிகள் மட்டுமே இருந்தது.
பாகிஸ்தான் காஷ்மீர் மீது தொடுத்த ராணுவ நடவடிக்கை மற்றும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார். காஷ்மீிரை இந்தியாவோடு இணைக்கும் முயற்சியில் ஜவகர்லால் நேரு தலைமையிலான இந்திய அரசு காஷ்மீர் பிரச்சனையை மிக சாதுரியமாக கையாண்டது ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனை மற்றும் ஒப்புதலோடும் காஷ்மீர் மக்களின் பாதுகாப்பு நலன் அவர்களின் உணர்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் காஷ்மீரை இந்தியாவோடு இணைப்பது என்ற இந்திய அரசின் முடிவு சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு
1947 அக்டோபர் 26 அன்று காஷ்மீர் இந்தியாவோடு இணையும் ஒப்பந்தம் சுமுகமாக நிறைவேறியது என்பதை வரலாற்று ஆவணங்களிலும், அரசாங்கத்தின் பதிவுகளிலும் தெளிவாக காண முடிகிறது.
மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் ஜம்மு & காஷ்மீரை இணைக்க இணைவு ஆவணத்தில் (Instrument of accession of Jammu and Kashmir) கையெழுத்திட்டதும், அதனை ஏற்றுக்கொண்டு இந்திய இராணுவத்தை அனுப்பி காஷ்மீரை காப்பாற்றியதும், அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நியாயமான நிலையை முன்வைத்ததும், அனைத்தும் நேரு அவர்களின் தலைமையில்தான் நடைபெற்றது. இதற்கு சர்தார் வல்லபாய் பட்டேல் முழு ஒத்துழைப்பு நல்கினார்.
சர்தார் வல்லபாய் பட்டேலும் நேருவும் ஒரே நோக்கில், இந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்காகச் செயல்பட்டனர். ஜவஹர்லால் நேரு அவர்கள் காஷ்மீர் பிரச்சனையை மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலும் ஐ.நா.சபையின் அடிப்படையிலும் சுமுகமான முறையில் இந்தியாவோடு இணைக்க வேண்டும் என்று விரும்பினார். அதனை சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களும் ஏற்றுக் கொண்டார்.
இருவரையும் எதிராக நிறுத்தும் முயற்சி, நாட்டின் வரலாற்றையும் தேசத்தின் கண்ணியத்தையும் சிதைக்கும் ஆபத்தான முயற்சியாகும். வரலாற்றை அரசியலுக்காக வளைத்து தன் மனம் போன போக்கில் பேசுவது நாட்டின் உயர்வான பதவியில் உள்ள பிரதமருக்கு அழகல்ல. சுதந்திர இந்தியாவில் ஜவஹர்லால் நேரு மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் உள்ளிட்ட தேச தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய மரியாதை அளிக்க வேண்டியது மத்திய அரசின் பொறுப்பாகும் என்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்துகிறது
பீகார் மாநில தேர்தலில் வாக்கு வங்கியை குறிவைத்து உண்மைக்கு புறம்பான மோடியின் அரசியல் உரையாடல்கள் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து பிரிவினை வாதத்தை தலை தூக்கச் செய்யும் முயற்சியை மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இத்தகைய விஷமத்தனமான பிரச்சாரங்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.