’நான் முதல்வன்’ திட்டத்தில் பயன்பெற்றேன் - யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடித்த பிரஷாந்த் பேட்டி!
யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டில் 2ம் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த மருத்துவ மாணவர் பிரஷாந்த், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் பயன் பெற்றதாகவும், ஐஏஎஸ் அதிகாரியாக யுபிஎஸ்சி தேர்விற்கு படிப்பவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பணிகளான ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகள் மற்றும் குரூப் ’ஏ’ மற்றும் குரூப் ’பி’ பணிகளுக்கான யுபிஎஸ்சி தேர்வுகள் கடந்த ஆண்டு நடைபெற்றன. இதில் மூன்று கட்டங்களிலும் தேர்ச்சி பெற்று, தேர்வு செய்யப்படுவோருக்கு அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில், பணிகள் ஒதுக்கப்படும்.
மூன்று நிலைகளில் நடத்தப்படும் 2023 யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுகள் மே 28-ம் தேதி அன்று நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மெயின் தேர்வு செப்டம்பர் 15, 2023 அன்று முதல் ஐந்து நாட்களுக்கு நடத்தப்பட்டது. மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2024 ஜனவரி 4 முதல் ஏப்ரல் 9-ம் தேதி வரை நேர்காணல் நடத்தப்பட்டது.
நேற்று (ஏப். 16) யுபிஎஸ்சி தேர்வு ஆணையம் சிஎஸ்சி தேர்வு முடிவுகளை தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டது. இதில், 1143 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வில் லக்னோவை சேர்ந்த ஆதித்ய ஸ்ரீவஸ்தவா என்பவர் முதலிடம் பிடித்து உள்ளார்.
அதேபோல், தமிழ்நாட்டில் யுபிஎஸ்சி இறுதித் தேர்வில் 2ஆம் இடம் பிடித்த சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் பிரஷாந்த் தொடர்ந்து குடிமை பணிகள் தேர்வு எழுதக் கூடியவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூஸ் 7 தமிழ் செய்தியாளருக்கு அவர் பிரத்யேகமாக அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“மருத்துவத் துறையில் படிக்கும் போது முதலமைச்சர் கையால் 40 தங்க பதக்கங்களை பெற்றுள்ளேன். பல மக்களுக்கு சேவை செய்வதற்கு ஐஏஎஸ் பதவி உதவும் என்று இந்த தேர்வு எழுதினேன். புத்தக படிப்பு மட்டும் இல்லாமல் தலைமைப் பண்பு மற்றும் படிப்பை தாண்டிய திறமைகளும் முக்கியம் என்று என் பெற்றோர்கள் வளர்த்தார்கள்.
தேர்வு மருத்துவ அறிவியல் சார்ந்தது என்பதால் சற்று சுலபமாக இருந்தது. கடின உழைப்புடன் புத்திசாலித்தனமாக செயலாற்றி படிப்பது மிக அவசியம். படிப்பதில் தொடர்ச்சி இருக்க வேண்டும். பல மணி நேரம் படித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது கட்டுக்கதை. 2 முதல் 3 மணி நேர தொடர்ச்சியான படிப்பே போதுமானது.
இந்தியாவிலேயே மருத்துவ அறிவியல் படிப்பை எடுத்ததில் நான் அதிக மதிப்பெண் என்பது மகிழ்ச்சி. குடும்பத்தில் பெற்றோர் என் மீது நம்பிக்கை வைத்து நான் விரும்புவதை படிக்க உடன் நின்றனர். தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் நான் பயன்பெற்றுள்ளேன். ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக இதுபோல் யுபிஎஸ்சி படிப்பவர்களுக்கு என்னால் இயன்ற முன்னெடுப்பு எடுப்பேன்” இவ்வாறு தெரிவித்தார்.
இவர் தனது முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் 78வது இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.