"இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன்" - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி!
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக “ஆபரேஷன் சிந்தூர்” என்று பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது.
மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ள நிலையில் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
"பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் போஜ்பூர் காஷ்மீர் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து "ஆபரேஷன்சிந்தூர்" என்ற திட்டத்தை துல்லியமாக செயல்படுத்தியதற்காக இந்திய ஆயுதப்படைகளை நான் பாராட்டுகிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்க்கமான நடவடிக்கை, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் நமது குடிமக்களைப் பாதுகாப்பதற்கும் நமது நாட்டின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.