“பாலாவை ஹீரோவாக அறிமுகப்படுத்துவதாக அறிவித்தேன், ஆனால்...” - ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி!
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் பாலா. தொடர்ந்து இவர் நாய் சேகர், Friendship உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதனிடையே இவர் சமூக சேவைகளிகளிலும் ஈடுபட்டு வருகிறார். மருத்துவ உதவிக்கு ஆம்புலன்ஸ் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்களுக்கு தொடர்ந்து ஆம்புலன்ஸ் வழங்கி உதவி வருகிறார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்தாண்டு பாலாவை ஹீரோவாக அறிமுகம் செய்யப்போவதாக கூறினார். அதன் பின்பு எந்தவித அறிவிப்பும் வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில் பாலாவின் முதல் திரைப்படம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பதிவில் ஒரு போஸ்டரை பகிர்ந்துள்ளார். அதில் பாலாவின் முதல் படத்தை ஆதிமூலம் கிரியேசன்ஸ் தயாரிப்பதாகவும் ரணம் படத்தை இயக்கிய ஷெரிப் இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்திற்கு விவேக் - மெர்வின் ஆகியோர் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த பதிவில், “என் தம்பி பாலா தனது வாழ்நாள் கனவை நனவாக்கப் போகிறார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது தயாரிப்பில் அவரை அறிமுகப்படுத்துவதாக நான் அறிவித்திருந்தேன்.ஆனால், ஒரு வாரத்திற்குள், ஒரு நல்ல தயாரிப்பாளர் நல்ல ஸ்கிரிப்டுடன் அணுகினார். அவரது முதல் படம் விரைவில் வெளியாக உள்ளது” என்று நெகிழ்ச்சியாக கூறினார்.