'விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி : சச்சின் டெண்டுல்கர் பெருமிதம்!
’விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, அதுவும் மிகப் பெரிய அரங்கில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எனது சொந்த மைதானத்தில் நடந்திருக்கிறது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை போட்டியில் 45 லீக் ஆட்டங்கள் முடிவுற்று தற்போது நாக் அவுட் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அரையிறுதியில் நியூஸிலாந்திடம் தோற்று இறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா. அதற்கு பழிதீர்க்கும் வகையில் தற்போதைய அரையிறுதியில் இந்தியா சிறப்பாக ஆடி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மும்பையில் வாங்டே மைதானத்தில் இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் பேட்டிங்கை தேர்வு செய்தார். மொத்தம் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 397 ரன்கள் எடுத்த 4 விக்கெட்டுகள் இழந்திருந்தது. அதிகபட்சமாக விராட்கோலி 117 ரன்கள் எடுத்திருந்தார். எனவே நியூசிலாந்து அணிக்கு 398 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து தன் எக்ஸ் தளத்தில் சச்சின் டெண்டுல்கர், “இந்திய டிரஸ்ஸிங் அறையில் உங்களை முதன்முதலில் நான் சந்தித்தபோது, மற்ற அணியினர் என் கால்களைத் தொடும்படி கிண்டல் செய்தார்கள். அன்று என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்கள் ஆர்வத்தாலும் திறமையாலும் என் இதயத்தைத் தொட்டீர்கள். அந்த சிறுவன் 'விராட்’ வீரராக வளர்ந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரு இந்தியர் எனது சாதனையை முறியடித்ததை விட நான் மகிழ்ச்சியடைய முடியாது. அதுவும் மிகப் பெரிய அரங்கில், உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எனது சொந்த மைதானத்தில் நடந்திருக்கிறது” என தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார்.