“இன்கிரிடிஃபிள் இளையராஜா நான்” - சிம்பொனி அரங்கேற்ற லண்டன் புறப்பட்ட இளையராஜா பேட்டி!
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவர் இளையராஜா. இவர் கடந்தாண்டு ஒரு முழு சிம்பொனியை முடித்துவிட்டதாக தெரிவித்திருந்தார். தொடர்ந்து அந்த சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சி வருகிற மார்ச் 8ஆம் தேதி லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் நடக்கும் என்று தெரிவித்திருந்தார்.
அதனால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள இளையராஜாவை நேரில் சென்று வாழ்த்தினர்.
இந்த நிலையில் லண்டன் செல்ல சென்னை வினாநிலையம் வந்த இளையராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், ‘ஒரு தமிழராக எப்படி உணர்கிறீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘மனுஷனாக எப்படி உணர்கிறேன் என கேளுங்கள். இப்படிப்பட்ட இடைஞ்சலான கேள்விகளைக் கேட்காதீர்கள்’ என்றார்.
தொடர்ந்து அவரிடம், இசையமைப்பாளர் தேவா தன் இசையை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாரே அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு, “நான் எதற்காக வந்திருக்கிறேன்? இந்த மாதிரி அனாவசியமான கேள்விகளை என்னிடம் கேட்கலாமா?’ எனப் பதிலளித்தார். தொடர்ந்து அவர், “உங்கள் அனைவரின் சார்பாகத்தான் லண்டன் செல்கிறேன். இது நாட்டின் பெருமை. இன்கிரிடிஃபிள்இந்தியா மாதிரி இன்கிரிடிஃபிள் இளையராஜா நான்”
இவ்வாறு இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.