“நம்பிக்கையில்லா தீர்மானத்தால் எள் அளவும் வருத்தமில்லை” - சபாநாயகர் அப்பாவு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சபாநாயகருக்கு எதிராக அதிமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதுதொடர்பாக பேசியுள்ள அப்பாவு,
“எதிர்க்கட்சி தலைவர் உட்பட தோழமை கட்சி தலைவர்கள் பேசிய அனைத்தையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஒருசில தவறுகள் நடந்திருந்தாலும் கூட என்னை நானே திருத்தியிருப்பேன் அல்லது முதலமைச்சரால் திருத்தப்பட்டிருப்பேன்.
எதிர்க்கட்சி தலைவர் வைத்திருக்கும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் எதை சொன்னாலும் ஆத்திரத்தோடோ, எரிச்சலோடோ முதலமைச்சர் இதுவரை பார்த்ததில்லை.
எதிர்க்கட்சியினருக்கு அதிகளவு பேச வாய்ப்பு அளித்தது குறித்து முதலமைச்சர் அவரது சார்பாக என்னிடம் இதுவரை பேசவில்லை. இதன் மூலம் ஜனநாயகம் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு ஒரே நாளில் இரண்டு மூன்று மானியக்கோரிக்கை நடத்துவதாக குற்றச்சாட்டுகள் வைத்தீர்கள்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது 30க்கும் மேற்பட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகளை ஒரே நாளில் நடத்தியதும் நினைவு கூறுகிறேன். ஜனநாயக முறைப்படி எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு அளித்திருப்பதை அமைச்சர்கள் கூட பேரவையில் பதிவு செய்துள்ளனர்.
இந்த தீர்மானம் இங்கே விவாதிக்கப்பட்டது எனக்கு எள் முனையளவும் வருத்தம் இல்லை. இந்த கருத்து நான் கடந்து வந்த நான்காண்டு காலத்தில் அதிமுகவினுடைய வாதங்களில் தெளிவாக புரிந்து கொண்டது. அவர்களும் என் பணியை பாராட்டியுள்ளதாகவே எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நேரடி ஒளிபரப்பு என்பது படிப்படியாக நடந்து கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.