#Hyderabad | ஆம்புலன்ஸ் வாகனத்தை திருடி சென்ற திருடன் - 120 கிமீ விரட்டிப்பிடித்த காவல்துறை!
ஹைதராபாத்தில் உள்ள ஹையத் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒருவர் திருடிச்சென்றுள்ளார். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர்.
ஹைதராபாத்தில் உள்ள ஹையத் நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் காணாமல் போனதால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவல் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய போலீசார். திருடன் ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு தேசிய நெடுஞ்சாலை வழியாக ஆம்புலன்ஸை ஓட்டி செல்வதை கண்டுபிடித்தனர்.
ஹைதராபாத் முதல் விஜயவாடா வரை உள்ள சோதனை சாவடிகளிலும், காவல் நிலையங்களிலும் தகவல் அளித்து சாலையில் தடைகளை ஏற்படுத்தி ஆம்புலன்ஸை மடக்கி பிடிக்க போலீசார் தீவிர முயற்சி எடுத்தனர். ஆனால் சூர்யாபேட்டை வரை சுமார் 120 கிமீ தூரம், போலீசார் அமைத்த எந்த தடைகளிலும் சிக்காமல் ஆம்புலன்ஸை அந்த நபர் ஒட்டிச் சென்றுள்ளார். சித்தியால அருகே நடு ரோட்டில் நின்று ஆம்புலன்ஸை நிறுத்த முயன்ற காவல்துறை அதிகாரி ஜான் ரெட்டி மீது ஆம்புலன்ஸை மோதிவிட்டு தப்பி சென்றார் அந்த நபர்.
இதனால் படுகாயமடைந்த காவல்துறை அதிகாரி ஜான் ரெட்டி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் சூர்யாபேட்டை அருகே சாலையின் குறுக்கே லாரியை நிறுத்தி வைத்து, ஆம்புலன்ஸை மடக்கி பிடித்து திருடனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.