சாலையில் சண்டைபோட்ட கணவன், மனைவி... சமாதானம் செய்த நபர் கொலை… முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறை!
கொலை வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம், மேலமெஞ்ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. முன்னாள்
ராணுவ வீரரான இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு, தனது மனைவியுடன் சாலையில் நின்று
சண்டை போட்டுள்ளார். அப்போது அதனை பார்த்த சாமுவேல் என்பவர், குடும்ப
பிரச்னையை வீட்டிற்குள் போய் பேசுங்கள் என சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த ஏழுமலை சாலையின் ஓரமாகக் கிடந்த ஒரு கம்பை எடுத்து
சாமுவேலை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த சாமுவேலை மீட்டு அவரது உறவினர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், சிகிச்சை பலனின்றி சாமுவேல் உயிரிழந்தார். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஏழுமலையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்
நடைபெற்று வந்த நிலையில், வழக்கு விசாரணையானது முடிவு பெற்று, குற்றவாளி
ஏழுமலைக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி மனோஜ்குமார் உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞர் எஸ்.வேலுச்சாமி ஆஜரானார். ஏழுமலையை ஜாமின் எடுக்க யாரும் முன்வராததால், அவர் சிறையிலேயே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.