ஹண்டர் பைடன் குற்றாவாளி என தீர்ப்பு.. ஜோ பைடன் அரசியல் வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படுமா?
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில், இது அரசியல்ரீதியாக அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் அவர் குற்றவாளி என்று அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்வதற்கு அனுமதி இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களால் அதை வாங்க முடியாது.
இந்த நிலையில், துப்பாக்கி வாங்கும்போது போதைப்பொருள் பயன்படுத்தியதை வெளிப்படுத்தத் தவறியது, மேலும் 11 நாட்களுக்கு அதனை சட்டவிரோதமாக வைத்திருந்தது என மூன்று வழக்குகள் ஹண்டர் பைடன் மீது பதியப்பட்டு கடந்த சில நாள்களாக இந்த வழக்குகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் அவரது தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கப்படவில்லை. முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை ஹண்டர் பைடனுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் பல வழக்குகளில் சிக்கி அபராதம் செலுத்தி வரும் நிலையில் அந்த விவகாரங்கள் அவருக்குத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என பலர் தெரிவித்திருந்தனர். இது பைடனுக்கு சாதகமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது ஜோ பைடன் மகன் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பது அவருக்கு சறுக்கலை ஏற்படுத்தலாம் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இது அவருக்கு பாதகத்தை உண்டாக்குமா? இல்லையா? என்பது தேர்தல் முடிவே கூறும்.