பிரேசிலில் பெரும் பரபரப்பு - பேருந்தில் இறந்த பெண்ணின் உடலில் 26 ஐபோன்கள் கண்டுபிடிப்பு!
பிரேசில் நாட்டில், பேருந்தில் பயணித்த 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது உடலில் இருந்து 26 ஐபோன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பெண் ஐபோன்களைக் கடத்தினாரா என்ற கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் உள்ள சாவோ பவுலோவில் இருந்து குரிடிபா நோக்கி ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த 20 வயதுள்ள இளம் பெண்ணுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள், உடனடியாக ஓட்டுநரிடம் தெரிவித்தனர்.
உடனடியாகப் பேருந்து நிறுத்தப்பட்டு, பயணிகளும், ஓட்டுநரும் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற சுமார் 45 நிமிடங்கள் போராடியுள்ளனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்தப் பெண்ணின் உடலை கைப்பற்றினர்.
காவல் துறையினர், அந்தப் பெண்ணின் உடலை சோதனையிட்டபோது, அவரது உடலில் உள்ள ஆடைகளுக்குள் ஒட்டப்பட்ட நிலையில் 26 ஐபோன்கள் இருந்ததைக் கண்டெடுத்தனர். அந்தப் பெண்ணின் உடலில் ஐபோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது, காவல் துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் உயிரிழந்த அந்தப் பெண் யார், அவர் ஏன் ஐபோன்களை உடலில் மறைத்து வைத்திருந்தார், அவற்றை எங்கு கொண்டு சென்றார், அவர் ஐபோன் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவரா என்ற கோணங்களில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தப் பெண்ணின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, அவர் மாரடைப்பால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தெரியவரும். இந்தச் சம்பவம் பிரேசிலில் பெரும் பரபரப்பையும், பேசுபொருளையும் ஏற்படுத்தியுள்ளது.