இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி..? – ஒரு மினி ரிவ்யூ!
இந்த வாரம் விதார்த் நடித்துள்ள ’மருதம்’, சோனியா அகர்வாலின் ’வில்’, ரஞ்சித் நடித்த ’இறுதி முயற்சி’ மற்றும் கண்ணா ரவி நடித்த ’வேடுவன்(வெப்சீரிஸ்)’ ஆகியவை ரிலீஸ் ஆகியுள்ளன. இந்த படங்களின் மினி ரிவியூ இதோ உங்களுக்காக.
மருதம்
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சின்ன கிராமத்தில் விவசாயியாக இருக்கும் விதார்த்துக்கு ஒரு பிரச்னை வருகிறது. இறந்தபோன அவர் அப்பா லோன் வாங்கியதாக சொல்லி அவர் நிலத்தை ஏலம் விடுகிறது தனியார் பேங்க். அப்படி எந்த லோனும் வாங்கவில்லை என கோர்ட்டுக்கு சென்று போராடுகிறார் விதார்த். சட்டரீதியாக அவர் ஜெயித்தாரா? லோன் விஷயத்தில் ஏமாற்றியது யார் என்பது தான மருதம் படத்தின் கதை. இப்படத்தை வி.கஜேந்திரன் இயக்கியுள்ளார்.
விவசாயிகள் பிரச்னைகளை பற்றி பல படங்கள் பேசியிருந்தாலும் , இந்த கதை வித்தியாசமானது. அப்பாவி விவசாயிகளை பேங்க் அதிகாரிகள், ஒரு டீம் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறது என்பதை விலாவரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர். குறிப்பாக கோர்ட் காட்சிகள், மோசடி எப் படி நடந்தது என்பதை புள் ளி விவரங்களுடன் சொல்லும் திரைக்கதை படத்தை அழுத்தமாக்கிறது.
கன்னியப்பன் என்ற விவசாயியாக உணர்ச்சிபூர்வமாக நடித்து இருக்கிறார் விதார்த். நிலம் பறி போவதால் அவர் அவதிப்படுகிற சீன், எப்படி மோசடி நடந்தது என அவர் கண்டுபிடிக்கிற சீன், கோர்ட்டில் தானே வாதாடுகிற சீன்
எளிய விவசாயிகள் குரலாக அவர் கேரக்டர் இருக்கிறது. ஹீரோயிசன் , கமர்சியல் விஷயங்கள் அதிகம் இல்லாத இப்படிப்பட்ட நல்ல கதையை தேர்ந்தெடுத்த அவரை பாராட்டலாம். அவர் மனைவியாக நடித்த ரக் ஷனாவும் கிராமத்து பெண்ணாக இயல்பாக நடித்து இருக்கிறார். லோன் மோசடி செய்யும் சரவண சுப்பையா, விதார்த் நண்பராக வரும் மாறன் , நல்ல வக்கீலாக வரும் தினந்தோறும் நாகராஜன் கேரக்டரும் கதைக்கு பிளஸ். அந்த ஜட்ஜ், கிராமத்து மக்கள், விவசாயிகள் நடிக்காமல் கேரக்டராகவே வாழ்ந்து இருக்கிறார்கள். என்.ஆர்.ரகுநந்தன் இசை கதைக்கு உயிர் ஊட்டுகிறது. விவசாயிகள் படம் என்றாலும் பிரச்சார நெடி இல்லாத விறுவிறு சீன்கள், கோர்ட் வசனங்கள், திருப்பங்கள் நச்மாறன் சம்பந்தப்பட்ட காமெடி படத்துக்கு ரிலாக்ஸ்.
ராணிப்பேட்டை கிராமப்புற காட்சிகள், கோர்ட் விசாரணை காட்சிகள் அவ்வளவு லைவ். தனியார் பள்ளி மோகத்தையும், அரசுபள்ளிகள் மீதான அவசியத்தையும் சொன்னவிதம் அருமை. இப்படியெல்லாம் மோசடி நடக்கிறது என விழிப்புணர்வு விஷயமும், நாட்டில் நல்லவர்களும் இருக்காங்க, நீதி வெல்லும் என்ற மெசேஜ் மருதத்தை மறக்க முடியாத படமாக்குகின்றன. படத்துக்கு சில விருதுகள் நிச்சயம்.
இறுதி முயற்சி
வெங்கட் ஜனா இயக்கத்தில் ரஞ்சித், மெகாலி மீனாட்சி நடித்து இருக்கும் படம். கடன் வாங்கியவர்கள் படும் கஷ்டங்கள், அவமானங்கள், கந்து வட்டிக்காரர்களின் அக்கிரமங்களை உணர்ச்சிபூர்வமாக பேசுகிறது. தொழில் நஷ்டம், மகன் ஆபரேசனுக்காக 80 லட்சம் கடன் வாங்குகிறார் ரஞ்சித். அதை கட்ட முடியாமல், அவதிப்படுகிறார். வட்டிக்கு பணம் கொடுத்த வில்லன்கள் விட்டல்ராவ், புதுப்பேட்டை சுரேஷ் வரம்பு மீறுகிறார்கள். தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் ரஞ்சித். என்ன நடக்கிறது என்பது படத்தின் கரு. கடன் வாங்கியதால் அவமானங்களை சந்திக்கும் கேரக்டரில் ரஞ்சித் நடிப்பு உருக்கமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் அவர் குடும்பத்துடன் தற்கொலை செய்ய நினைக்கும் காட்சிகள் ரொம்பவே உருக்கம். அவர் மனைவியாக வரும் மெகாலி மீனாட்சியும் தத்ரூமாக நடித்து இருக்கிறார்.
வில்லன்கள் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். கந்து வட்டி தொழிலின் மறுபக்கம், கடன் வாங்கியவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை விரிவாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஆனால், படம் முழுக்க கடன், தற்கொலையை சுற்றி வருவதால் போராடிக்கிறது. ரஞ்சித் குடும்பத்துக்கு உதவுபவராக ஒருவர் வருகிறார். முகம் தெரியாத அவருக்கு வாய்ஸ் கொடுத்து இருக்கிறார் விஜய்சேதுபதி. அந்த காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. கிளைமாக்ஸ் பாசிட்டிவ் என்றாலும், கந்து கடன் வாங்கக்கூடாது என்ற நல்ல கருத்தை சொன்னாலும், கதையில் பல குழப்பங்கள், சந்தேகங்கள் மற்றபடி, ஒரு இடத்தில் கதை சுற்றி வருவதும், கமர்ஷியல், அழுத்தமான விஷயங்கள் இல்லாததும் படத்தை பலவீனமாக்குகிறது.
வில்
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலிடம் ஒரு சொத்து சம்பந்தப்பட்ட கேஸ் வருகிறது. அதில் தவறு இருப்பதாக அவர் சந்தேகப்படுகிறார். அந்த வழக்கு பேக்கிரண்ட் குறித்து போலீஸ் விசாரிக்க உத்தரவிடுகிறார். அந்த வழக்கு என்ன? சோனியாவுக்கு என்ன சந்தேகம் ஏற்பட்டது. வழக்கிற்கும் ஹீரோயின் அலக்கியாவுக்கும் என்ன தொடர்பு, அவருக்கான நீதி கிடைத்ததா என்பதுதான் கதை. எஸ்.சிவராமன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
நீதிபதி சோனியா அகர்வால் உத்தரவுப்படி, சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்த் அந்த வழக்கு குறித்து விசாரிக்கிறார். சென்னையை சேர்ந்த பணக்கார, வயதான தொழிலதிபரான பதம்குமார், ஹீரோயின் அலக்கியா பெயரில் 2 கோடிமதிப்புள்ள ஒரு பிளாட்டை எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுகிறார். அந்த பிளாட்டை தங்கள் வசமாக்க, பதம்குமார் மகன், குடும்பத்தினர் முயற்சிக்கிறார்கள். ஒரு போலியை தயார் செய்து, அவர்தான் அலக்கியா என்கிறார்கள். தொழிலதிபர், ஹீரோயின் என்ன தொடர்பு, பிளாட்டை எழுதி வைத்தது ஏன்? என்ற ரீதியில் கதை நகர்கிறது. நீதிபதி கேரக்டரக்கு பொருத்தமாக இருக்கிறார் சோனியா. அவரின் நடிப்பும் கச்சிதம். குடும்ப பிரச்னை, தனிப்பட்ட பிரச்னை, சொத்து பிரச்னை என பல பிரச்னைகளை சந்திப்பவராக ஹீரோயின் அலக்கியா வருகிறார். பல இடங்களில் மெர்ச்சுடு ஆக நடித்து இருக்கிறார். கிளைமாக்சில் அவர் நடிப்பும் பீலிங். தொழிலதிபராக வரும் பதம்குமாரும், விக்ராந்தும் கதைக்கு ஓரளவு வலு சேர்க்கிறார்கள். ஆனால், கதையில் நிறைய கேள்விகள். ஒரு இளம் பணத்துக்காக இப்படி மாறுவாரா? இது சரியா? இந்த உறவு சரியா என்ற கேள்விகளுக்கு விடை இல்லை. கொஞ்சம் சிக்கலான கரு என்றாலும், அலக்கியா குடும்ப பிரச்னைகள், அதில் வரும் சிக்கல் வேகத்தடை. இதற்கிடையில் கர்ப்பம், குழந்தை, மோசமான கணவன் என வேறுதிசைக்கும் படம் பயணக்கிறது. வில் என்றால் உயில் என அர்த்தம். தொழிலதிபர் உயிலால் பிரச்னைகள் வருவதால் இந்த தலைப்பு. வித்தியாசமான கதை, ஓரளவு நல்ல நடிப்பு என்றாலும் ஏனோ திருப்பதி இல்லை.
வேடுவன்( வெப்சீரிஸ்)
பவன்குமார் இயக்கத்தில் உருவான வெப்சீரிஸ் வேடுவன். ஒரு என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் சினிமா ஹீரோவான கண்ணாரவி. அது, ஒரு போலீஸ் அதிகாரியின் நிஜக்கதை. உயர் அதிகாரிகளால் டார்கெட் வைக்கப்படும் ரவுடிகளை பிச்சைக்காரன் உள்ளிட்ட வேடத்தில் சென்று அவர்களின் கதையை முடிப்பது அந்த அதிகாரியின் பாலிசி. ஆதிநாதன் என்ற தாதாவான சஞ்சீவ் கதையை முடிக்க, ஓட்டல் தொழிலாளியாக மாறுகிறார் கண்ணாரவி. ஒரு கட்டத்தில் சஞ்சீவ் மனைவி தனது முன்னாள் தோழி என்பதை அறிகிறார். அவர்களுக்கு இடையில் நட்பு வளர்கிறது. ஆனாலும், தொழிலை காதலிக்கும் அவர், சஞ்சீவ்வை சுட்டுக்கொல்கிறார். ஒரு காலத்தில் அவர் தற்கொலை செய்கிறார். உண்மையில் அது தற்கொலையா? போலீஸ் அதிகாரி கண்ணாரவியை கொன்றது யார் என்பதை பல்வேறு திருப்பங்களுடன் சில எபிஷோட்களாக கதை நகர்கிறது.
சினிமா நடிகர், போலீஸ் அதிகாரி என 2 வேடத்தில் வரும் கண்ணாரவி நடிப்பு சிறப்பு, சினிமாவில் நடித்துக்கொண்டே, தான் நடிக்கும் போலீஸ் அதிகாரிக்கு என்ன நடந்தது என்று அவர் ஆர்வமாக கண்டுபிடிப்பு செம. அவர் மனைவியாக லாவண்யா, தோழியாக வரும் வினுஷா இரண்டுபேரும் போட்டி போட்டு நடித்து இருக்கிறார்கள். அதிலும் வினுஷாவின் இரண்டுவிதமான நடிப்பு சீரியசை இன்னும் விறுவிறுப்பாக்குகிறது. ஒவ்வொரு எபிஷோட்டும் டக்கென முடிவதும், ஒவ்வொன்றிலும் புதுப்புது விஷயங்கள் நடப்பதும், கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டும் பிளஸ். சில சீன்கள் வேகமாக நகர்வதும், சிலர் நடிப்பு செயற்கையாக இருப்பதும் மைனஸ்.ஆனாலும், என்கவுன்டர் பிளான், கண்ணாரவி - வினுஷா நடிப்பு, திரைக்கதை, கிளைமாக்ஸ், நிஜ சம்பவங்களுடன், சினிமா கதையை இணைத்து இருக்கும் திரைக்கதை வேடுவனை பார்க்க வைக்கிறது.
சிறப்பு செய்தியாளர் : மீனாட்சிசுந்தரம்