Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

IC 814 தி கந்தஹார் ஹைஜாக் #WebSeries எப்படி இருக்கிறது ? - #MovieReview

08:22 PM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் உருவாகியுள்ள கந்தஹார் விமானக் கடத்தல் தொடர் எப்படி இருக்கிறது என்பது குறித்து விரிவாக காணலாம்.

Advertisement

கந்தஹார் விமானக் கடத்தல் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு ஐசி 814: தி கந்தஹார் ஹைஜாக் வெப் சீரிஸாக உருவாகியுள்ளது. இந்த தொடரை அனுபவ் சின்ஹா இயக்கியுள்ளார். விஜய் வர்மா, நஸ்ருதீன் ஷா, அரவிந்த் சாமி, தியா மிர்சா பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மொத்தம் 6 எபிசோடுகளை கொண்டதாக இந்த சீசன் அமைந்துள்ளது. இப்படத்தின் இயக்குநரான அனுபவ் சின்ஹா ஆர்டிகல் 15, தப்பட், முல்க் ஆகிய மிகச் சிறந்த படங்களை இயக்கியதன் மூலம் பாலிவுட்டில் பிரபலமான இயக்குநராக அறியப்படுகிறார். இவர் இயக்கிய ஆர்டிகல் 15 படம்தான் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி எனும் பெயரில் வெளியானது.

உண்மைக் கதை :

1999 டிசம்பரில், ஐசி 814 என்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு செல்லும் வழியில், 5 தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த கடத்தல் 8 நாட்கள் நீடித்தது. பயணிகளின் உயிரை காப்பாற்ற வாஜ்பாய் தலைமையிலான இந்திய அரசு 3 பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டிய கடினமான முடிவை எடுத்தது. அந்த நேரத்தில் உளவுத்துறை தலைவராக இருந்த அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த ஜஸ்வந்த் சிங் இருவரும் இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்தனர். விமானக் கடத்தலின்போது அந்த விமானத்தை இயக்கிய பைலட் எழுதிய “Fear into Flight” எனும் புத்தகம் மற்றும் உண்மை நிகழ்வுகளை தழுவி இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

காத்மண்டுவில் தொடங்கி கந்தஹாரில் முடியும் கொடூரப் பயணம் :

திரைப்படத்தின் முதல் காட்சி காத்மண்டுவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் உளவாளிகளின் சந்திப்பில் இருந்து தொடங்குகிறது. தற்போது இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை பார்க்கும்போது இந்த ஹைஜாக்கை நினைத்துக் கூட பார்க்க முடியாது. கடத்தலின்போது தீவிரவாதிகளும், அமைதிப் பேச்சுவார்த்தையின்போது ஐபி மற்றும் ரா உளவுத் துறை அதிகாரிகளும் மிகவும் கேஷுவலாகவே விஷயத்தை கையாள்வதை பார்க்க முடிகிறது.

திரைப்படத்தின் நாயகனாக உள்ள நடிகர் விஜய் வர்மா தனது கூலான நடிப்பின் மூலம் ரசிகர்கள் முன்னிலையில் உண்மையான பைலட்டையே நினைவுகூற வைத்துவிடுகிறார். கடத்தலின்போதும் , அந்த விமானம் துபாய் மற்றும் கந்தஹாரில் தரையிறங்கும்போதும் நடக்கும் நிகழ்வுகளை அப்படியே உண்மைச் சம்பத்தை போல தத்ரூபமாக காண்பித்துள்ளனர். 1999ல் எடுக்கப்பட்ட உண்மைக் காட்சிகள் காணொலிகளாக சரியான இடங்களில் படத்தில் இணைத்திருப்பது திரைப்படத்திற்கு கூடுதல் பலத்தை தருகிறது.

பெண் பத்திரிகையாளர் :

பத்திரிகையாளராக நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ள அம்ரித் பூரி அந்த கேரக்டருக்கு அப்படியே பொருந்திப் போகிறார். பிற பத்திரிகைகளை காட்டிலும் அவர் முன்வைக்கும் கோணம் ஜனநாயகத்தின் நான்காது தூண் என கருதப்படுகிற பத்திரிகையின் அவசியத்தை உணர்த்துகின்றன. அக்காலகட்டத்தில் அச்சு ஊடகத்திற்கும் காட்சி ஊடகத்திற்கும் இடையிலான சிறு சண்டையை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். தற்போது அவை காட்சி ஊடகத்திற்கும் டிஜிட்டல் ஊடகங்களுக்கும் இடையிலான சண்டையாக மாறியிருக்கிறது.

பேச்சுவார்த்தையும் சிகரெட் புகையும் :

உளவுத்துறை அதிகாரிகளின் கதபாத்திரத்தில் நடித்துள்ள அரவிந்த் சாமி, குமுந்த் மிஷ்ரா, மனோஜ் பாஹ்வா மற்றும் கேபினர் செக்ரெட்டரியாக நடித்துள்ள நஸ்ருத்தீன் ஷா ஆகியோரின் நடிப்பும் கவனம் பெற வைத்துள்ளது. ஆனால் உளவுத் துறை அலுவலகம் முதல் கந்தஹாரில் தீவிரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது வரை சதா சிகரெட்டை புகைத்துக் கொண்டு மிகவும் கூலாக பதற்றமே இல்லாமல் கையாண்டுள்ள காட்சிகள் இடம்பெற்று ஒருவாறு பார்வையாளர்களுக்கு அவர்கள் மேல் கோபத்தை ஏற்படுத்துகின்றன. உண்மையில் அப்படித்தான் கையாண்டர்களா என்கிற கேள்வியை எழுப்ப தோன்றுகிறது.

ஜம்மு காஷ்மீரில் முதலமைச்சருடன் இந்திய உளவுத் துறையின் தலைவர் பேச்சுவார்த்தை நடத்துவார். அப்போது காஷ்மீர் முதலமைச்சராக ஒருவரை காண்பித்துள்ளனர். அவர் தொப்பி மற்றும் முதுகை மட்டுமே காண்பிக்கின்றனர். அவர் தோற்றத்தை வைத்து அவர் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லாதான் என கண்டுபிடிக்க முடிகிறது. அந்த அளவுக்கு நடிகர்கள் தேர்வு மிக கச்சிதமாக உள்ளது.

மர்மங்கள்:

பிரதமர் பேச்சுவார்த்தைக்கு மறுத்தது…, கடத்தப்பட்ட விமானத்தில் உளவுத்துறையைத் சார்ந்த ஒரு நபர் இருந்தது., தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் இருந்து கொண்டு மிகவும் சாதாரண நிகழ்வுகளைப் போல கையாண்ட விதம் ஆகியவைதான் மர்மமாக இருக்கிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனை அன்றைய காலத்தில் வாஜ்பாய் அரசின் மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்பட்டது. ஆனால் அதனை காரணம்காட்டி அமெரிக்கா இந்தியா மீது பொருளாதார தடை விதித்தது , அதன் தொடர்ச்சியாக கந்தஹார் விமான கடத்தலில் இந்தியாவுக்கு அமெரிக்க உதவ மறுத்தது போன்ற விவரங்களை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் படத்தின் இயக்குநர்.

கந்தஹாரில் தாலிபான்களின் நடவடிக்கைகள், அவர்களது அரசின் உதவி, அதற்கு இந்தியாவின் நன்றி போன்ற காட்சியமைப்புகள் நம்மை 1999காலகட்டத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டன ஆர்டிகல் 15 போல.., முல்க் போல.. மிகச்சிறந்த கதையம்சத்தை தனது வழக்கமான திரைமொழியின் மூலம் கச்சிதமாக பார்வையாளர்களுக்கு கடத்தியுள்ளார் அனுபவ் சின்ஹா.

- ச.அகமது
Tags :
Anubav SinhaIC 814 Kandhahar HijackKandhaharNetflixottWebseries
Advertisement
Next Article