பள்ளி வேன் மீது ரயில் மோதியது எப்படி? - விபத்தில் காயமடைந்த மாணவர் அதிர்ச்சி தகவல்!
கடலூரில் செம்மங்குப்பம் அருகே தனியார் பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அந்த வேன் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றது. அப்போது சிதம்பரம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தனியார் பள்ளி வாகனம் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பள்ளி மாணவி மற்றும் மாணவர் என 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அருகில் இருந்தவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்தானது, கேட் கீப்பரின் கவன குறைவால் ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செழியன் என்ற மாணவர், சிகிச்சை பலனில்லாமல் உயிரிந்தார். இவர் விபத்தில் ஏற்கெனவே உயிரிழந்த மாணவியின் தம்பி என்ற அதிர்ச்சி தகவல் வெளியானது. இதன்மூலம் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. பள்ளி வேனின் ஓட்டுநர் மற்றும் வேனில் பயணித்த ஒரு மாணவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், விபத்து நடந்த இடத்தில் மாணவர்களை காப்பாற்ற முயன்ற நபர் மீது வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்தார்.
அவரும் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டுநர் கேட்டை திறக்க சொன்னதால்தான் கேட் கீப்பர் கதவை திறந்ததாகவும், அதனால்தான் விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில், இந்த விபத்தில் காயமடைந்த விஸ்கேஸ் என்ற மாணவர் நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசும்போது, "கேட் திறந்தேதான் இருந்தது. ரயில் வரும் சப்தம் கூட கேட்கவில்லை. அதனால் ரயில் சென்றுவிட்டதாக நினைத்து ஓட்டுநர் சென்றிருப்பார். திடீரென வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. வேனில் நான், என் வகுப்பு மாணவன், அவனின் அக்கா, என் தம்பி ஆகியோர் இருந்தோம். வேன் ஓட்டுநர் கேட் கதவை திறக்கச் சொல்லவில்லை. விபத்து நடந்த பிறகு கூட கேட் கீப்பர் வந்து பாக்கவில்லை. அவர் தூக்கிக்கொண்டிருந்தாரா? என்று தெரியவில்லை" என்றார்.