“எங்களுடைய சொத்தை எப்படி திருடலாம்?” - காப்புரிமைக்கு விளக்கம் கொடுத்த கங்கை அமரன்!
உலக சர்வதேச தமிழ் திரைப்பட சங்கத்தின் வீட்ஃபா முதலாவது சர்வதேச மாநாடு சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் கங்கை அமரன், இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்று உரையாற்றினர்.
அப்போது கங்கை அமரன் பேசியதாவது, “காப்புரிமை விவகாரத்தில் உலக விதிகளை கடைபிடிக்கிறோம். அதை இந்திய விதிமுறைகளுக்கு கொண்டு வந்துவிட்டோம். லண்டனில் அதற்கான அலுவலகம் உள்ளது. மைக்கெல் ஜாக்சன் அவரே பாடல் எழுதி, இசையமைத்து நடிக்கிறார். அவர் கொண்டு வந்த திட்டம் எல்லா இடங்களுக்கும் பரவி விட்டது.
கதாசிரியர்களுக்கு கதையில் உரிமை உண்டு, அதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்த்தாலும் உரிமை உண்டு. ஆனால் பாடலுக்கும் அதுக்கும் தொடர்பு இல்லை. பாடல் தனி கிரியேஷன். படத்துக்கு ஒட்டாத ஒரு இசையமைப்பாளரை போட்டு அவர்களிடம் காசு வாங்குகிறார்கள். எங்களுடைய ‘அன்னக்கிளி’ திரைப்படத்துக்கு பூஜை போடும்போது ரூ. 10 ஆயிரம் கொடுத்தார்கள். ஆனால், இன்றைக்கு வரை எங்களுக்குத் தெரியாது அந்தப் படத்துக்கு அப்படியொரு வியாபாரம் நடந்திருக்கிறது.
அதனால்தான் அண்ணன் மியூசிக் கான்ட்ராக்ட்டை வாங்கிவிடுவார். 7 கோடி ரூபாய்க்கு ஒரு இசையமைப்பாளரை போட்டு, அவர் பாடலுக்கு கைதட்டு விழாமல் எங்களின் பாடலுக்கு கைதட்டல் விழுகிறது. ‘நீ பொட்டு வைச்ச தங்க குடம்’, ‘சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரு போல வருமா’, ‘என் ஜோடி மஞ்ச குருவி’ போல எங்கள் பாடலுக்கு கைதட்டல் வருகிறது.
உங்கள் பாடல் ஹிட் ஆகவில்லை. எங்கள் பாடல் போட்டதும் கொண்டாடுகிறார்கள் என்றால் அதற்கான கூலி எங்களுக்கு கிடைப்பதுதானே சரி? எங்களுக்கு அனுமதி வாங்கியிருந்தால் போதும். அதை கேட்டாலே அவர் இலவசமாக கொடுத்திருப்பார். பணத்தாசை இல்லை, கொட்டிக்கிடக்கிறது. விதிப்படி நடக்க வேண்டும். அஜித் படம் என்றெல்லாம் எதுவும் இல்லை. எங்களுடைய பாடல் அது. கேட்டிருந்தால் சந்தோஷமாக கொடுத்திருப்போம். கேட்கவில்லை என்பதால்தான் கேள்வி எழுகிறது. எங்களுடைய சொத்தை எப்படி திருடலாம்? அதற்கு அனுமதி வாங்கியிருக்கலாம்” என்றார்.