எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறை - வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை உ.பி. அரசு தடுத்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு!
எதிர்கட்சி முகவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்வதை தடுத்துள்ளதாக உ.பி. அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
நாட்டில் 18-வது நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வாக்குப்பதிவு ஜூன் 1ம் நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று காலை சரியாக 8மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். முதலாவதாக தபால் வாக்கு எண்ணப்படும். மக்களவைத் தேர்தலோடு ஆந்திரா. ஒடிசா போன்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளும் எண்ணப்படும். அதேபோல தமிழ்நாட்டில் இடைத் தேர்தல் நடைபெற்ற விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
”பல்வேறு மாவட்டங்களில் எதிர்க்கட்சிகளின் நிர்வாகிகளை வீட்டிலேயே சிறை வைத்துள்ளனர். அவர்கள் இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளக்கூடாது என்பதே மாநில அரசின் நோக்கமாக இருக்கிறது. ஒரு தலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்; உச்சநீதிமன்றமும், தலைமை தேர்தல் ஆணையமும் விரைந்து தலையிட வேண்டும்” என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்க்கட்சி வாக்குச்சாவடி முகவர்களை சட்டவிரோதமாக வீட்டுக் காவலில் வைத்துள்ளதாக கூறி சிசிடிவி ஆதாரங்களை அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ளார்.