உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டு 2023! ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள்!
பூமியின் சராசரி வெப்பநிலை நெருங்கி, 2023 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் அதிக வெப்பமான ஆண்டாக இருக்கிறது என ஐரோப்பிய ஒன்றிய விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
பூமியின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த 2015 ஆம் ஆண்டு பாரீஸ் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு பதிவான சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸை விட சற்றுதான் குறைவாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, வெப்பநிலை உயர்வால் ஐரோப்பா, வட அமெரிக்கா, சீனா உள்ளிட்ட உலகின் பெரும்பாலான நாடுகளில் கடந்த ஆண்டில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டன. பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வறட்சி, வெள்ளம், வெப்ப அலை போன்ற மிகத் தீவிரமான காலநிலை மாற்றங்கள் நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : அதிமுக வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை இன்று மாலை வெளியீடு!
பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை சராசரி 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட அதிகரித்துள்ளது என ஐரோப்பிய ஒன்றிய காலநிலை கண்காணிப்பு சேவை அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கோபர்நிகஸின் துணை இயக்குநர் சமந்தா பர்ஜஸ் கூறியதாவது :
"தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தை விட, கடந்த ஆண்டில்தான் முதல் முறையாக அனைத்து நாட்களிலும் ஒரு டிகிரி அளவுக்கு அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 14.98 டிகிரி செல்சியஸ் என கணக்கிட்டுள்ளது. இது முந்தைய மிகவும் வெப்பமான ஆண்டான 2016-இல் பதிவான வெப்பநிலையை விட 0.17 டிகிரி செல்சியஸ் அதிகமாகும்.
வெப்பநிலை உயர்வால் ஏற்படும் காலநிலை மாற்ற நிகழ்வுகள் நம்மை மட்டும் அல்லாமல், நம்முடைய வரும் தலைமுறையினரையும் பாதிக்கும். கடந்த ஆண்டில் ஜூன் மாதத்திலிருந்து தொடர்ந்து 7 மாதங்களுக்கு எப்போதும் இல்லாத அளவில் அதிகபட்ச வெப்பநிலை பதிவானது.
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது. மேலும், பூமியிலிருந்து வெளியேறும் வெப்பத்தைச் சிறைப்பிடிக்கும் பசுமை இல்ல வாயுக்களின் அளவு, வளிமண்டலத்தில் அதிகரித்திருப்பது முக்கியக் காரணம். கடலுக்கடியில் உள்ள ஓர் எரிமலை கடந்த 2022 ஆம் ஆண்டு வெடித்தது. இந்த நிகழ்வால் அதிக அளவிலான நீர், நீராவியாக வளிமண்டலத்துக்குச் சென்றது. இந்நிலையில், பெருங்கடல் வெப்பநிலை அதிகரிப்பால் 2023 ஆம் ஆண்டை விட இந்த ஆண்டு வெப்பநிலை அதிகமாக இருக்கலாம்"
இவ்வாறு கோபர்நிகஸின் துணை இயக்குநர் சமந்தா பர்ஜஸ் தெரிவித்தார்.