ஒசூர் தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழா - திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வினோத வழிபாடு!
ஒசூர் அருகே பழமை வாய்ந்த தர்மராஜா கோயில் தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வினோதமான முறையில் வழிபாடு செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜ சாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் தேர்த்திருவிழா 10 நாட்கள் தொடர்ந்து பல்வேறு பூஜைகளுடன் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஒசாபுரம் - கூட்டூர் கிராமம் முதல் டி.கொத்தப்பள்ளி கிராமம் வரை உள்ள 27 கிராம மக்கள் ஒன்று கூடி தேர் இழுத்து வழிபடுவார்கள்.
அந்த வகையில் 385 வது ஆண்டாக இந்த ஆண்டும் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. கடந்த மாதம் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த திருவிழாவில் தினமும் திரௌபதி அம்மனுக்கும், தர்மராஜருக்கும் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன.
இதையும் படியுங்கள் : தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசியதால் மக்கள் அவதி!
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று (மே. 1) ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொள்ள மிக கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக தர்மராஜ சாமி உற்சவ மூர்த்தி அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்ட திருத்தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதனைத்தொடர்ந்து, பத்து நாட்களும் உணவின்றி விரதம் இருக்கும் இக்கோயிலின்
பூசாரி மீது, தர்மராஜ சாமியே இறங்கி வந்து அருள் பாலித்து ஆசீர்வதிக்கும் விதமாக பக்தர்கள் மீது துடைப்பம் மற்றும் முறத்தால் அடித்து அருள் கூறினார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர்.
இதனால், குழந்தை பாக்கியம், கடன் பிரச்னைக்கு தீர்வு, திருமண தடை நீங்கி குடும்பங்களில் அமைதி நிலவுவதுடன் வாழ்வில் வளம் பெறுவார்கள் என்பது கிராம மக்களின் நம்பிக்கை. இந்த வினோதமான நிகழ்வை காண தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.