புனித #Hajj பயணம் : விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
புனித ஹஜ் பயண மேற்கொள்வதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 23ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலங்களின் ஒன்றாக திகழ்வது மெக்கா நகரம் . ஹஜ் எனும் புனித பயணம் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றாகும். அனைத்து இஸ்லாமியர்களும் ஒரு முறையாவது இந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கல் மெக்காவிற்கு புனித ஹஜ் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்தாண்டிற்கான புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 23.09.2024 வரை இந்திய ஹஜ் குழு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
"இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை செப்.23 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) ஐபோன் (அல்லது) ஆண்ட்ராய்டு கைபேசியில் “HAJ SUVIDHA” செயலியினை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.
இதையும் படியுங்கள் : #WeatherUpdate | தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! -வானிலை மையம் தகவல்!
இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 23.09.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும். குறைந்தது 15.01.2026 வரையில் செல்லத் தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழு இணையதள முகவரி (www.hajcommittee.gov.in)ஐ தொடர்பு கொள்ளலாம்"
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.