நெல்லை அருகே புனித ஆகத்தம்மாள் ஆலய தேர் திருவிழா கோலாகலம் - ஏராளமானோர் பங்கேற்பு!
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ரம்மதபுரம் என்ற சிற்றூர் உள்ளது. இந்த ஊரில் 200 ஆண்டுகள் பழமையான புனித ஆகத்தம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 2 நாட்கள் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்தாண்டும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை திருப்பலியும், மாலையில் இதர நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நேற்று மாலை அருட்தந்தை ஜோதிமணி தலைமையில் ஆராதனை நடைபெற்றது. இந்த திருவிழாவில் புனித ஆகத்தம்மாள் தேரில் ரத வீதிகளில் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு உப்பு மற்றும் மிளகு தூவி வழிபட்டனர். இந்த திருவிழாவிற்காக ஏற்பாடுகளை பங்குத்தந்தை அற்புத சேவியர் மற்றும் அந்த கிராம மக்கள் செய்திருந்தனர். இந்த திருவிழா காரணமாக அந்த பகுதி முழுவதும் திருவிழா கோலம் பூண்டது.