சோகத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம் - 4 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தின் சாம்டோலி பகுதியைச் சேர்ந்த 15-16 வயதுடைய பத்தாம் வகுப்பு மாணவர்கள் நேற்று ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் பத்லாப்பூர் பகுதியில் உள்ள உல்ஹாஸ் ஆற்றில் ஹோலி வண்ணங்களை கழுவுவதற்காக குளிக்க திட்டமிட்டு இறங்கியுள்ளனர்.
எட்டு பேர் கொண்ட குழு ஆற்றில் இறங்கியுள்ளது. அப்போது ஒரு சிறுவன் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். இதில் ஆர்யன் மேதர் (15), ஓம் சிங் தோமர் (15), சித்தார்த் சிங் (16), மற்றும் ஆர்யன் சிங் (16) ஆகிய 4 பேரும் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த மற்ற சிறுவர்கள் உடனடியாக உள்ளூர்வாசிகள், காவல்துறை மற்றும் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர் நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களை காப்பற்ற முடியவில்லை. தொடர்ந்து 2 மணிநேர தேடலுக்கு பின் நால்வரின் உடல்களையும் மீட்டுள்ளனர். நால்வரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.