Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீண்டும் ஹிண்டன்பர்க் பூதம்! ரூ.56,000 கோடி அம்பேல்.... அதிர்ச்சியில் அதானி குழும முதலீட்டாளர்கள்!

01:39 PM Aug 12, 2024 IST | Web Editor
Advertisement

-எஸ்.சையத் இப்ராஹிம்

Advertisement

நாட்டின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான அதானி குழுமத்தின் பங்குகள் வாரத்தின் முதல் நாளான இன்றும் இந்திய பங்குச் சந்தை வர்த்தகத்தில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. அதாவது இன்று ஒரே நாளில் சுமார் 7% அளவுக்கு பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. அதானி குழுமத்தின் சரிவு இன்று இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதானி குழும பங்குகளின் விலை சரிவு ஏன்?

அதானி குழுமத்தின் பங்குகளின் விலையை முறைகேடாக உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தவராகக் கூறப்படும் வினோத் அதானிக்கு சொந்தமான மொரிஷியஸ் நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியமான ‘செபி’யின் தலைவர் மாதவி புச் மற்றும் அவரது கணவருக்கு பங்குகள் இருப்பதாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் கடந்த 10-ம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதானி குழுமம் - மாதவி புச் குடும்பத்திற்கு இடையே உள்ள தொடர்பு, செபி தலைவர் பதவியில் இருந்துகொண்டு அதானி குழுமத்திற்கு ஆதரவாக மாதவி புச் எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டிருந்தது ஹிண்டன்பர்க் நிறுவனம். இந்த அறிக்கை, இந்திய வணிக சாம்ராஜ்யத்தில் பெரும் புயலைக் கிளப்பியது.

அவசர அவசரமாக மறுத்த மாதவி புச்...

ஆனால், ஹிண்டர்பர்க் குற்றச்சாட்டை செபியின் தலைவர் மாதவி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் உடனடியாக மறுத்தனர். ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியான சில மணி நேரத்திலேயே மாதவி புச் தரப்பில் இருந்து மறுப்பு அறிக்கை வெளியானது.

புயலைக் கிளப்பிய அடுத்த அறிக்கை!

ஆனால், மாதவி புச் தரப்பு மறுப்பு அறிக்கையை ஏற்றுக் கொள்ளாத ஹிண்டன்பர்க் நிறுவனம், முதலில் தான் தெரிவித்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக வேறொரு பதிவை ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு 11.17 மணிக்கு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டது ஹிண்டர்பர்க்.

ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில் வெளியான பதிவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இதிலிருந்தே இந்த பதிவின் முக்கியத்துவத்தை அறியலாம்.

பாதாளத்தை நோக்கி அதானி பங்குகள்!

ஹிண்டன்பர்க் நிறுவனம் எக்ஸ் தளத்தில், மாதவி புச் விளக்க அறிக்கைக்கு மீண்டும் பதிலடி கொடுத்ததோடு, பல கேள்விகளை முன்வைத்தது. அதன் விவரம் வருமாறு:

யார் இந்த மாதவி புச்?

1966-ஆம் ஆண்டில் மும்பையில் பிறந்தவர் மாதவி புச். கணிதம் மற்றும் நிதி சார்ந்த துறையில் இளங்கலை பட்டம் பெற்ற அவர் ஐஐஎம் அகமதாபாத்தில் MBA பட்டம் பெற்றார். நிதித் துறையில் அவரது பயணம் 1989-இல் ஐசிஐசிஐ வங்கியில் சேர்ந்த போது தொடங்கியது. ஐசிஐசிஐ வங்கியில் மாதவி புச் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றினார்.

2009-ம் ஆண்டில் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸுக்கு இடம் பெயர்ந்தார். அதன் நிர்வாக இயக்குநராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டார். ஐசிஐசிஐ செக்யூரிட்டியின் உயர் பதவியை அலங்கரித்த முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றார் மாதவி புச். இவரது வழிகாட்டுதலின் கீழ், ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.

ஐசிஐசிஐயை விட்டு வெளியேறிய பிறகு, மாதவி புச் சர்வதேச அளவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தினார். சீனாவின் ஷாங்காயில் உள்ள நியூ டெவலப்மென்ட் வங்கியின் ஆலோசகராகப் பணியாற்றினார். பின்னர் தனியார் பங்கு நிறுவனமான கிரேட்டர் பசிபிக் கேப்பிட்டலின் சிங்கப்பூர் அலுவலகத்தை வழிநடத்தினார். இந்தப் பதவிகள் அவருக்கு உலகளாவிய நிதிச் சந்தைகள் பற்றிய அனுபவத்தை வழங்கின.

பின்னர் இந்தியா திரும்பிய, மாதவி புச் ஐடியா செல்லுலார் லிமிடெட் மற்றும் என்ஐஐடி லிமிடெட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருந்துள்ளார். அவரது பல்வேறு அனுபவங்கள் 2017-ல் செபியின் முழுநேர உறுப்பினர் என்ற பதவியை தந்தது. அங்கு அவர் பல்வேறு முக்கிய பணிகளை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார். அப்போதைய செபி தலைவர் அஜய் தியாகியுடன் இணைந்து பணியாற்றியதால் அவருடைய செல்வாக்கு மேலும் அதிகரித்தது. பின்னர் மார்ச் 2022-ல், செபியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை மாதவி புச் அடைந்தார். SEBI தலைவராக, மாதவி தற்போது பங்குச் சந்தை மேற்பார்வை மற்றும் கண்காணிப்பு தொடர்பான முக்கிய துறைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

ஒரே நாளில் ரூ.56,000 கோடி இழப்பு!

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க்கின் அடுத்தடுத்த பதிவுகளால், இந்தியப் பங்குச் சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகள் சுமார் 7 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. இதனால், முதலீட்டாளர்கள் சுமார் ரூ.56,000 கோடி வரை இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள் கண்டனம்!

ஹிண்டன்பர்க்கின் புதிய அறிக்கை வெளியான நிலையில், “அதானியின் பெரும் ஊழலின் அளவு குறித்து நாடாளுமன்றக் கூட்டு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்” என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது. செபி தலைவர் பதவியில் இருந்து மாதவி புச் உடனடியாக விலக வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் சதி என பாஜக குற்றச்சாட்டு!

இதனிடையே, ஹிண்டன்பர்க் அறிக்கை மூலம் பங்குச் சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மக்களவைத் தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக தோல்வியடைந்த காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி தலைவர்களும், அவர்களை ஊக்குவிக்கும் டூல் கிட் ஆட்களும் நாட்டை பொருளாதாரரீதியாக சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் தனது முதல் அறிக்கையை வெளியிட்டு 18 மாதங்களுக்குப் பிறகு தற்போது புதிய குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு எதிராக ஜனவரி, 2023இல் வெளியான அந்த அறிக்கை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை கிளப்பின என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
AdaniHindenburgReportHindenburgResearchIndiaMadhaviBuchREPORTSEBIShareMarketsharemarketindiaStockExchange
Advertisement
Next Article