இமாச்சலப் பிரதேசம் | நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பேருந்து.. 18 பேர் உயிரிழப்பு!
இமாச்சல ப்பிரதேச மாநிலம் பிலஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொரோடன் நகரில் இருந்து குளு மாவட்டத்தின் கலல் நகருக்கு நேற்று மாலை ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த பேருந்து, பிலஸ்பூரின் பாலு நகர் உள்ள பாலம் அருகே மலைகள் உள்ள பகுதியில் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, பேருந்து முழுவதும் பாறைகள் விழுந்து, பேருந்தை மண் மூடியது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
கடந்த சில தினங்களாக இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும், கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.