இமாச்சலப் பிரதேச நிலச்சரிவு - பிரதமர் மோடி இரங்கல்!
இமாச்சல ப்பிரதேச மாநிலம் பிலஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மொரோடன் நகரில் இருந்து குளு மாவட்டத்தின் கலல் நகருக்கு நேற்று மாலை ஆம்னி பேருந்து ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 20க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. அந்த பேருந்து, பிலஸ்பூரின் பாலு நகர் உள்ள பாலம் அருகே மலைகள் உள்ள பகுதியில் சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது, மலைப்பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, பேருந்து முழுவதும் பாறைகள் விழுந்து, பேருந்தை மண் மூடியது. இந்த சம்பவம் குறித்து உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புக்குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மூன்று குழந்தைகள் உள்பட 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில், இச்சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது,
"இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூரில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிரிழந்ததிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்"
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.