கொல்கத்தாவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியைக்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் அவர் வேலை விட்டு நிற்பதாக அறிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி ஒன்று அங்கு பணி செய்த ஆசிரியைக்கு ஹிஜாப் அணிந்து வேலை செய்வதற்கு தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியை தனது மத உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதால் மத உணர்வுகளை கல்லூரி நிர்வாகம் புண்படுத்தியதாக கூறி வேலை நிற்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா பல்கலைகழகத்தின் கீழ் எல்.ஜே.டி.சட்டக் கல்லூரி செயல்படுகிறது . இந்த கல்லூரியில் ஆசிரியையாக பணியாற்றுபவர் சஞ்ஜிதா காதர். இவர் கடந்த மே 31ம் தேதி கல்லூரிக்கு வழக்கமாக ஹிஜாப் அணிந்து வந்தபோது கல்லூரி நிர்வாகக் குழு ஹிஜாப் அணிந்து வர வேண்டாம் எனவும் அதனை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியது. இதனைத் தொடர்ந்து சஞ்சிதா காதர் ஜூன் 5முதல் கல்லூரிக்கு வேலைக்கு வருவதையே நிறுத்திவிட்டார்.
அவர் வேலைக்கு சேர்ந்த முதலே ஹிஜாப் அணிந்துதான் கல்லூரிக்கு வந்துள்ளார். மே இறுதி வாரத்தில் இவை பிரச்னையாக ஆக்கப்பட்டு கல்லூரி நிர்வாகக் குழு கட்டுப்பாடுகள் விதித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஆசிரியைக்கு ஹிஜாப் அணிய தடை என்கிற விவகாரம் பொதுவெளியில் பரவியதை அடுத்து கல்லூரி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
எல்.ஜே.டி. கல்லூரியின் நிர்வாகிகள் இது தொடர்பாக தெரிவித்த போது “ ஆசிரியர்கள் உடை ஒழுங்கு குறித்து மட்டும் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. மற்றபடி தலையில் முக்காடு அணிவதை நாங்கள் தடை செய்யவில்லை.தவறாக பொருள்கொள்ளப்பட்டுவிட்டது. எனவே ஜூன் 11ம் தேதி (இன்று) முதல் அவர் பணியில் தொடரலாம். ஹிஜாப் அணிய அவருக்கு தடை இல்லை என தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆசிரியை சஞ்சிதா காதருக்கு பணியில் சேரும்படி மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கல்லூரி நிர்வாகத்தின் மின்னஞ்சல் குறித்து பதிலளித்த ஆசிரியை சஞ்சிதா காதர் “ கல்லூரி செல்வது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. திங்கட்கிழமை அலுவலகத்திலிருந்து எனக்கு மின்னஞ்சல் வந்தது. அடுத்தகட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து பிறகு முடிவு செய்வேன். ஆனால் நான் இன்று (செவ்வாய்கிழமை ) கல்லூரிக்கு செல்லமாட்டேன்” என தெரிவித்துள்ளார்.