நுழைவுத் தேர்வு முறைகேடுகளை தடுக்க உயர்மட்ட நிபுணர் குழு - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
நுழைவுத் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்க, தேர்வுகள் வெளிப்படையாக, மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற முடிந்த நீட் தேர்வுகளில் ஏராளமான முறைகேடு நடைபெற்றதாக மாணவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் 6 பேர் ஒரே மதிப்பெண் எடுத்திருப்பது மற்றும் மாணவர்களுக்கு வெவ்வேறு வினாத் தாள்கள் வழங்கப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேசிய தேர்வு நடைமுறைகளில் நிலவும் பிரச்னைகளை சரிசெய்ய மத்திய கல்வி அமைச்சகம் உயர்மட்ட நிபுணர் குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்த குழு 2 மாதங்களுக்குள் தனது அறிக்கையை மத்திய அமைச்சகத்திடம் சமர்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன், எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குல்ரியா, சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி உள்ளிட்ட 7 பேர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
தேர்வுகள் வெளிப்படையாக, சுமூகமாக மற்றும் நியாயமாக நடத்துவதை உறுதி செய்வதற்காக உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.