#Hezbolla தலைவர் ஹஸன் நஸ்ரல்லா மரணம் - காஷ்மீரில் பேரணி ; மெஹ்பூபா முஃப்தி இரங்கல்!
ஹிஸ்புல்லா தலைவர் ஹஸன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டதை கண்டித்து காஷ்மீரில் பேரணி நடைபெற்றது.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினரும், லெபனான் மீது இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரம் லெபனானில் பரவலாக ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவைச் சேர்ந்தோர் பயன்படுத்தும் தொலைத்தொடர்பு சாதனங்களான பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள், சைபர் வழி தாக்குதல்கள் மூலம் வெடிக்கச் செய்யப்பட்டன. இந்த கோர வெடிவிபத்துகளில் ஹிஸ்புல்லா குழுவைச் சேர்ந்தோர் மட்டுமல்லாது பொதுமக்கள் உள்பட சுமார் 3,000 பேர் காயமடைந்தனர். இரு குழந்தைகள் உள்பட 37 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல் நேரடியாகப் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இத்தகைய தொழில்நுட்பத் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தைக் குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், லெபனானின் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில், ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து, இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்த தாக்குதலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக உலகின் பலபகுதிகளில் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உலக நாடுகள் தலையிட்டு போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹஸன் நஸ்ரல்லாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாகவும் இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களை கண்டித்தும் ஜம்மு & காஷ்மீரில் பேரணி நடைபெற்றது. ஸ்ரீநகரில் பல்வேறு பகுதிகளில் குழந்தைகள் பெண்கள் உட்பட அதிக அளவிலான மக்கள் சாலைகளில் திரண்டு கறுப்புக்கொடி ஏந்தி அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான மெகபூபா முப்தி ஹசன் நஸ்ரல்லா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.