கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் வழக்கு - விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தொடர்ந்த வழக்கை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் காங்கிரஸ் – ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் இருந்தார். இதனிடையே, நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாக ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும், இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில், கடந்த ஜன.20-ம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதையடுத்து இரண்டு தினங்களுக்கு முன் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 36 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள், அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதலமைச்சர் பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் விலகினார். அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதனை அடுத்து ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பான சூழலில் ஹேமந்த் சோரனின் அமைச்சரவையில், அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து தன்னை அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிராக ஹேமந்த் சோரன் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை சம்மனை ரத்து செய்யக் கோரியும் தான் தாக்கல் செய்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புதிய முதலமைச்சர் - யார் இந்த சம்பாய் சோரன்..?
அதேநேரத்தில் ஏற்கெனவே உயர்நீதிமன்றத்தின் முன் நிலுவையில் உள்ள வழக்கின் மனுவில் அவர் திருத்தம் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஹேமந்த் சோரன் வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்றும் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.